10 ஆண்டுகளில் இந்தியாவில் இரண்டு டெஸ்ட் வெற்றிகள் பெற்ற முதல் வெளிநாட்டு கேப்டன் : ஸ்டீவ் ஸ்மித் சாதனை
கடந்த 10 ஆண்டுகளில் இந்திய மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவை வீழ்த்திய முதல் கேப்டன் என்ற பெருமையை ஸ்டீவ் ஸ்மித் பெற்றுள்ளார். இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவை எதிர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதன் மூலம் அவர் இந்த சாதனையை செய்துள்ளார். முன்னதாக ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தாயின் உடல்நிலை மோசமடைந்ததால் அவசரமாக நாடு திரும்பினார். இதையடுத்து தற்காலிகமாக ஸ்மித் ஆஸ்திரேலியாவை வழிநடத்தினார். இதற்கிடையே, 2010க்கு பிறகு, இந்தியாவில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வென்ற இரண்டாவது வெளிநாட்டு அணி கேப்டன் என்ற சிறப்பையும் ஸ்மித் பெற்றுள்ளார். முன்னதாக இங்கிலாந்தின் அலைஸ்டார் குக் இந்த சாதனையை செய்துள்ளார்.
ஸ்டீவ் ஸ்மித் சாதனை : முழு விபரம்
ஸ்டீவ் ஸ்மித்தின் இரண்டு வெற்றிகள் 2017 இல் புனேவிலும் 2023 இல் இந்தூரிலும் பெறப்பட்ட நிலையில், அலைஸ்டர் குக்கின் கீழ் இங்கிலாந்து 2012/13 தொடரில் இரண்டு வெற்றியை பெற்றது. இந்தியாவை பொறுத்தவரை மற்ற கேப்டன்களை விட ஸ்மித்தின் கேப்டன்சி தனித்து பேசப்படுகிறது. இந்தூரில் அவரது பந்துவீச்சு மாற்றங்கள் மற்றும் கள அமைப்புகளை ரசிகர்கள் மற்றும் நிபுணர்கள் பாராட்டினர். இந்தூரில் பெற்ற இந்த வெற்றியின் மூலம், மார்க் டெய்லர், ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் வாக், ஆலன் பார்டர் மற்றும் மைக்கேல் கிளார்க் போன்ற சில முன்னாள் கேப்டன்களை விட ஸ்மித் ஆஸ்திரேலியாவின் கேப்டனாக இந்தியாவில் அதிக வெற்றிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார.