இலங்கை கிரிக்கெட்டின் புதிய ஆலோசகராக சனத் ஜெயசூர்யா நியமனம்
இலங்கை கிரிக்கெட் அணியானது சமீப காலமாக பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில், இலங்கை அணியின் செயல்பாடுகள் மேலும் அந்த அணிக்கு அவப்பெயரையே தேடுத் தந்திருக்கின்றன. பத்து அணிகள் கலந்து கொண்ட ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், தான் பங்கேற்ற ஒன்பது போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று ஏழு தோல்விகளை சந்தித்திருக்கிறது இலங்கை அணி. அந்நாட்டின் கிரிக்கெட் கட்டமைப்பையே ஒட்டுமொத்தமாக மறுகட்டமைப்பு செய்ய வேண்டியிருக்கும் சூழ்நிலையில், இலங்கையின் முழுநேர கிரிக்கெட் ஆலோசகராக அந்நாட்டின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான சனத் ஜெயசூர்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒராண்டு கால பதவி:
இந்த கிரிக்கெட் ஆலோசகர் பதவியில் ஓராண்டு காலம் சனத் ஜெயசூர்யா நீடிக்கவிருக்கும் நிலையில், இந்த ஓராண்டு காலத்திற்குள் அந்நாட்டின் பல்வேறு கிரிக்கெட் தொடர்பான செயல்பாடுகளையும் மேம்படுத்த அவருக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. உடனடியாக பதவியேற்றிருக்கும் அவர், புதிய தேர்வுக்குழு தலைமையுடன் தொடங்கி, வீரர்கள், பயிற்சியாளர்கள் தொடங்கி உதவியாளர்கள் வரை அனைவரது செயல்பாடுகளையும் மேற்பார்வையிடவிருக்கிறார். இலங்கையின் தலைநகரான கொழும்புவின் பிரேமதாசா மைதானத்தில் உள்ள ஹை-பெர்ஃபாமன்ஸ் சென்டரில் பணி செய்யவிருக்கிறார் சனத் ஜெயசூர்யா. பல்வேறு பிரச்சினைகளில் சிக்கித் தவித்து வரும் இலங்கை கிரிக்கெட்டை சரியான பாதையில் கொண்டு செலுத்த, மறுகட்டமைப்பு செய்வதற்கான புதிய முயற்சியாக இதனை மேற்கொண்டிருக்கிறது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம்.