கணுக்காலில் காயம்; வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரிலிருந்து முகமது சிராஜ் விடுவிப்பு
கணுக்கால் வலி காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் இருந்து முகமது சிராஜை பிசிசிஐ விடுத்துள்ளது. இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பிறகு நாடு திரும்பும் இந்திய கிரிக்கெட் அணியின் அஸ்வின் ரவிச்சந்திரன், அஜிங்க்யா ரஹானே, கே.எஸ்.பாரத் மற்றும் நவ்தீப் சைனி ஆகியோருடன் முகமது சிராஜும் இந்தியாவுக்கு திரும்ப உள்ளார். முகமது சிராஜ் கடைசியாக மார்ச் 2023இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த ஒருநாள் போட்டியில் பங்கேற்று, ஐந்து விக்கெட்டுகளுடன் தொடரை முடித்தார். 2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, ஒருநாள் போட்டிகளில் 43 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள முகமது சிராஜ், இந்த காலகட்டத்தில் இந்தியாவுக்காக அதிக விக்கெட் எடுத்தவர் ஆனார்.
வேகப்பந்துவீச்சை வழிநடத்தும் ஷர்துல் தாக்கூர்
முகமது சிராஜ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதால், தற்போது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான இந்தியாவின் ஒருநாள் தொடரில் அதிக அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சளராக ஷர்துல் தாக்கூர் மாறியுள்ளார். இதன் மூலம், இந்திய அணியில் வேகப்பந்துவீச்சை வழிநடத்த வேண்டிய கடமை தற்போது ஷர்துல் தாக்கூரிடம் வந்துள்ளது. ஷர்துல் ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை 35 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஷர்துல் தவிர, உம்ரான் மாலிக், ஜெய்தேவ் உனட்கட் மற்றும் முகேஷ் குமார் ஆகிய மூன்று வேப்பந்துவீச்சாளர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர். அணியில் ஏற்கனவே நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளதால், முகமது சிராஜுக்கு மாற்று வீரரை பிசிசிஐ அறிவிக்கவில்லை.