ஷுப்மன் கில்லுக்கு காயம்: 5வது டி20 போட்டியில் விளையாட மாட்டார்! சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு?
செய்தி முன்னோட்டம்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் கடைசிப் போட்டியில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திரத் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில் விலகியுள்ளார். கால் விரலில் ஏற்பட்டக் காயம் காரணமாக அவர் இந்தப் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. லக்னோவில் நடைபெற்ற 4வது டி20 போட்டிக்கு முன்னதாக நடந்தப் பயிற்சியின் போது, ஷுப்மன் கில்லின் கால் விரலில் பந்து பலமாகத் தாக்கியது. இதனால் அவர் மிகுந்த வலியால் அவதிப்பட்டதாகவும், சரியாக நடக்கக் கூட முடியாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மீதமுள்ளப் போட்டிகளில் அவருக்கு ஓய்வு அளிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
மாற்று வீரர்
ஷுப்மன் கில்லுக்குப் பதில் விளையாடப் போவது யார்?
ஷுப்மன் கில் விலகியதைத் தொடர்ந்து, தொடக்க ஆட்டக்காரராக சஞ்சு சாம்சன் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்தத் தொடரின் முதல் மூன்று போட்டிகளில் கில்லின் சொற்ப ரன்களால் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வந்த நிலையில், தற்போது இந்தக் காயம் சாம்சனுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. சமீபகாலமாக ஷுப்மன் கில் அடிக்கடிக் காயமடைவது பிசிசிஐ மற்றும் இந்திய ரசிகர்களுக்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, இந்தத் தொடரின் 4வது போட்டி மோசமானப் பனிமூட்டம் காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், தொடரைத் தீர்மானிக்கும் கடைசி மற்றும் 5வது டி20 போட்டி நாளை (டிசம்பர் 19) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.