விராட் கோலியின் சாதனையை சமன் செய்தார் ஷுப்மன் கில்!
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த ஐபிஎல் 2023 தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஷுப்மன் கில் 39 ரன்களில் அவுட்டானார். இதன் மூலம், அவர் ஐபிஎல் 2023 சீசனில் 890 ரன்களை குவித்து ஒரு சீசனில் இரண்டாவது அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். முன்னதாக, 2016இல் 973 ரன்கள் எடுத்த விராட் கோலி, ஒரு ஐபிஎல் சீசனில் அதிக ரன் குவித்தவராக இருப்பதோடு, 900 ரன்களுக்கு மேல் எடுத்த ஒரே வீரராகவும் தொடர்கிறார். ஐபிஎல் 2022இல் ஜோஸ் பட்லர் 863 ரன்கள் எடுத்து இரண்டாவது இடத்தில் இருந்த நிலையில், தற்போது ஷுப்மன் கில் அதை முறியடித்துள்ளார்.
ஐபிஎல் 2023இல் ஷுப்மன் கில் புள்ளி விபரங்கள்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் விளையாடியதன் மூலம் ஷுப்மன் கில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஐபிஎல் இறுதிப்போட்டியில் விளையாடியுள்ளார். இந்த மூன்று முறையும் அவர் 35 ரன்களுக்கும் மேல் ரன்களை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சீசனில் கில் ஏழு இன்னிங்ஸ்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ரன்களை எடுத்த நிலையில், அதில் மூன்று சாதனைகளும் அடங்கும். கில் அகமதாபாத்தின் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 572 ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட ஐபிஎல் சீசனில் ஒரு மைதானத்தில் 550 ரன்களுக்கு மேல் எடுத்த ஒரே வீரராக இருந்த விராட் கோலியின் சாதனையை சமன் செய்தார். கோலி 2016இல் பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் 597 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.