ஒரே ஆண்டில் 36 விக்கெட்டுகள்! இந்திய மகளிர் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஸ்ரீ சரிணி
செய்தி முன்னோட்டம்
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மகளிர் ஆசிய கோப்பை 2026 இறுதிப் போட்டியில், இலங்கைக்கு எதிராக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பின்னர் ஸ்ரீ சரிணி புதிய சாதனை படைத்துள்ளார். ஒரே காலண்டர் ஆண்டில் மகளிர் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் 35 விக்கெட்டுகளுக்கும் மேல் வீழ்த்திய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். 184 ரன்கள் இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடியபோது, ஹர்ஷிதா மாதவியின் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம். தனது 36வது விக்கெட்டைக் கைப்பற்றி இந்த சாதனையை அவர் நிகழ்த்தினார்.
இறுதிப்போட்டி
இறுதிப்போட்டியில் இலங்கை அணியின் வீழ்ச்சியும் சரிணியின் பந்துவீச்சும்
இலங்கை அணி 184 ரன்களை துரத்தியபோது, ஆரம்பத்தில் சாமரி அட்டபட்டு மற்றும் விஷ்மி குணரத்னே கூட்டணி ஓரளவு ஈடுகொடுத்து விளையாடியது.
இருப்பினும், 10வது ஓவரில் தீப்தி சர்மா இந்த முக்கியக் கூட்டணியைப் பிரித்துத் திருப்பத்தை ஏற்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து மிடில் ஓவர்களில் பந்துவீச்சைத் கையில் எடுத்த ஸ்ரீ சரிணி, கவிஷா தில்ஹாரி மற்றும் நிலக்ஷிகா சில்வா ஆகியோரின் விக்கெட்டுகளை ஒரே ஓவரில் அடுத்தடுத்து வீழ்த்தி இலங்கை அணியின் பேட்டிங் வரிசையை முற்றிலுமாக சரித்தார்.
சாதனையை முறியடித்த சரிணி
4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தல்
இந்த போட்டியில் தனது 4 ஓவர்களில் 20 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளை ஸ்ரீ சரிணி கைப்பற்றினார்.
இதன் மூலம் 2026 ஆம் ஆண்டில் சர்வதேச டி20 போட்டிகளில் அவரது மொத்த விக்கெட்டுகளின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்தது.
இதற்கு முன் 2018 ஆம் ஆண்டில் பூனம் யாதவ் 35 விக்கெட்டுகளை வீழ்த்தியதே இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனையின் சாதனையாக இருந்தது.
பூனம் யாதவின் சாதனையை முறியடித்து, ஒரே ஆண்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீராங்கனையாக சரிணி முதலிடம் பிடித்துள்ளார்.
ஆசிய கோப்பை
ஷஃபாலி - ஸ்மிருதி அதிரடி கூட்டணி மற்றும் 8வது ஆசியக் கோப்பை வெற்றி
முன்னதாக, டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த இந்திய அணிக்குத் தொடக்க வீராங்கனைகளான ஷஃபாலி வர்மா (68 ரன்கள்) மற்றும் ஸ்மிருதி மந்தனா (59 ரன்கள்) ஆகியோர் முதலாவது விக்கெட்டுக்கு 129 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தனர்.
இறுதியில் இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 111 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதால், 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்திய அணி தனது 8வது ஆசிய கோப்பையைக் கைப்பற்றி சாதனை படைத்தது.
ஆதிக்கம்
சர்வதேச அளவிலும் இந்திய அணியின் ஆதிக்கம்
இத்தொடர் முழுவதிலும் தோல்வியையே சந்திக்காமல் இந்திய மகளிர் அணி சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.
பந்துவீச்சிலும் பேட்டிங்கிலும் ஆதிக்கம் செலுத்திய இந்திய வீராங்கனைகளில், ஸ்ரீ சரிணியின் பந்துவீச்சு இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கியத் தூணாக அமைந்தது.
ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய மிகச்சில சுழற்பந்து வீச்சாளர்களின் வரிசையிலும் ஸ்ரீ சரிணி தற்போது இணைந்துள்ளார்.