முக்கிய வீரர் விலகல்; வங்கதேசத்திற்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு பின்னடைவு
வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரரான ஷிவம் துபே முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகி உள்ளார். மூன்று போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடர் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 6) அன்று குவாலியரில் தொடங்குகிறது. அணியில் இருந்து ஷிவம் துபே நீக்கப்பட்ட நிலையில், இளம் வீரர் திலக் வர்மா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். திலக் வர்மா ஞாயிற்றுக்கிழமை காலை குவாலியரில் உள்ள இந்திய அணியுடன் இணைவார் என பிசிசிஐ வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டில் தேசிய அணிக்கு திரும்பியதில் இருந்து ஷிவம் துபே இந்தியாவின் டி20 அணியில் நிலையான செயல்திறனுடன் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
பிசிசிஐ அறிவிப்பு
புதுப்பிக்கப்பட்ட இந்திய அணி வீரர்களின் பட்டியல்
ஷிவம் துபேவிற்கு பதிலாக இந்திய கிரிக்கெட் அணியில் சேர்க்கப்பட்டுள்ள திலக் வர்மா, இதுவரை 16 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் மொஹாலியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அவர் கடைசியாக விளையாடினார். இவற்றில் திலக் வர்மா இரண்டு அரைசதங்களுடன் 33.60 சராசரியில் 139.41 ஸ்ட்ரைக் ரேட்டில் 336 ரன்களை எடுத்துள்ளார். வங்கதேச டி20 போட்டிக்கான இந்திய அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், ரின்கு சிங், ஹர்திக் பாண்டியா, ரியான் பராக், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், வருண் சக்கரவர்த்தி, ஜித்தேஷ் சர்மா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, மயங்க் யாதவ், திலக் வர்மா.