வங்கதேச ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ஷகிப் அல் ஹசன் நியமனம்
வங்கதேச கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஷகிப் அல் ஹசன், வரவிருக்கும் ஆசிய கோப்பை மற்றும் 2023 ஒருநாள் உலகக்கோப்பைக்கான அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, கேப்டன் பதவியில் இருந்து தமீம் இக்பால் வெளியேறிய நிலையில், அவருக்கு பதிலாக ஷகிப் அல் ஹசன் பொறுப்பேற்கிறார். ஆல்ரவுண்டர் லிட்டன் தாஸ் மற்றும் மெஹிதி ஹசன் மிராஸ் போன்றோரும் கேப்டன் பதவிக்கான ரேஸில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், இறுதியில் ஷகிப் அல் ஹசனை வங்கதேச கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ளது. தற்போது தமீம் இக்பால் காயத்தால் அவதிப்படும் நிலையில், செப்டம்பரில் நடக்க உள்ள ஆசிய கோப்பை ஒருநாள் போட்டியில் தான் பங்கேற்க மாட்டேன் என அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
உலகக்கோப்பை மற்றும் ஆசிய கோப்பைக்கான அணி சனிக்கிழமை அறிவிப்பு
வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 11) செய்தியாளர்களை சந்தித்த வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் நஸ்முல் ஹசன் ஷகிப் அல் ஹசனை ஒருநாள் கிரிக்கெட் அணியில் கேப்டனாக தேர்வு செய்ததாக அறிவித்தார். இருப்பினும், ஷாகிப் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டனாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, அவரது எதிர்காலம் மற்றும் எந்த வடிவ கிரிக்கெட்டில் அவர் கேப்டனாக தொடர்வார் என்பது குறித்து அவர் நாடு திரும்பியதும் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார். ஷகிப் அல் ஹசன் தற்போது வெளிநாடுகளில் பிரான்சைஸ் லீக் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் ஆசிய கோப்பைக்கான 17 பேர் கொண்ட வங்கதேச அணி சனிக்கிழமை அறிவிக்கப்படும் என நஸ்முல் ஹசன் தெரிவித்துள்ளார்.