வெஸ்ட் இண்டீஸ் வெற்றிக்கு உதவிய தோனியின் அட்வைஸ்: மனம் திறந்த கேப்டன் ஷாய் ஹோப்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவிற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று ஏற்கனவே தொடரைக் கைப்பற்றியிருந்த நிலையில், கடைசி மற்றும் 3-வது ஒருநாள் போட்டி நியூ சண்டிகரில் நடைபெற்றது. இதில் ஆறுதல் வெற்றியை நோக்கிப் போராடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்தியா நிர்ணயித்த 352 ரன்கள் என்ற கடினமான இலக்கை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எட்டி சாதனையைப் படைத்தது. இப்போட்டியில் இறுதிவரை களத்தில் நின்று 143 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 162 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்ட கேப்டன் ஷாய் ஹோப், ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.
பொன்னான வார்த்தைகள்
தோனியின் ஃபினிஷிங் ஃபார்முலா
போட்டி நிறைவடைந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய ஷாய் ஹோப், இந்த இமாலய இலக்கை விரட்டும்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி தனக்கு அளித்த ஆலோசனையே திருப்புமுனையாக அமைந்தது என்று தெரிவித்தார்.
ஒருமுறை நான் தோனியுடன் பேசிக்கொண்டிருந்தபோது, நீ நினைப்பதை விட பேட்டிங் செய்ய களத்தில் உனக்கு அதிக நேரம் இருக்கிறது அதனால் இறுதி முடிவைப் பற்றி முன்கூட்டியே கவலைப்படாமல் செயல்முறையில் மட்டும் கவனம் செலுத்து. ஆட்டத்தைப் பிரித்துக்கொண்டு நிதானமாக அணுகு, பவுண்டரிகளை இறுதிக் கட்டத்தில் அடித்துக் கொள்ளலாம் என்று கூறினார்.
அந்தப் பொன்னான வார்த்தைகள்தான் இந்த கடினமான சேஸிங்கின் போது எனது மனதில் ஓடிக்கொண்டிருந்தது என அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
உடற்தகுதி
தசைப்பிடிப்பைத் தாண்டி களத்தில் நின்ற போராட்டம்
இந்தியாவில் நிலவும் பனிப்பொழிவு சேஸிங்கிற்கு சாதகமானது என்பதை உணர்ந்து திட்டமிட்டதாகக் குறிப்பிட்ட ஹோப், சுமார் 30 ஓவர்கள் முடிந்த நிலையில் தனது இடுப்புப் பகுதியில் கடுமையான தசைப்பிடிப்பு வலி ஏற்பட்ட போதிலும் இறுதிவரை களத்தில் நின்று போராடியதாகக் கூறினார்.
மேலும், இந்திய அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதன் காரணமாக கடைசி ஓவர்களில் உள்வட்டத்திற்குள் கூடுதல் ஃபீல்டரை நிறுத்த வேண்டிய சூழல் உருவானது தங்களுக்கு மிகப்பெரிய சாதகமாக அமைந்தது என்றும் தெரிவித்தார்.
பேட்டிங்கிற்கு சாதகமான இந்திய ஆடுகளங்களில் பந்துவீசுவது சவாலானது என்பதைத் தங்கள் பந்துவீச்சாளர்கள் கற்றுக் கொண்டுள்ளனர் என்றும், அடுத்து வரும் டி20 தொடருக்குள் முழு உடற்தகுதியுடன் திரும்புவேன் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.