'அன்பு தான் எல்லாம்' : கவுதம் காம்பிரின் கருத்தை நிராகரித்த ஷாஹித் அப்ரிடி
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆசிய கோப்பை 2023 தொடரின் லீக் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், சூப்பர் 4 சுற்றில் செப்டம்பர் 10 அன்று மீண்டும் மோதுகின்றன. முன்னதாக, செப்டம்பர் 2 அன்று நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தானின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப் மற்றும் நசீம் ஷா ஆகியோரால் இந்திய பேட்டர்கள் 266 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இருப்பினும், இரண்டாவது இன்னிங்ஸ் முழுவதும் மழை பெய்ததால், பாகிஸ்தானைப் போல் இந்திய பந்துவீச்சாளர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
முன்னாள் வீரர்களின் கருத்து மோதல்
2011 ஒருநாள் உலகக்கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்திருந்த தொடக்க ஆட்டக்காரர் கவுதம் காம்பிர், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வீரர்கள் மைதானத்திற்குள் எதிரணியினருடன் நட்புறவு காட்டக்கூடாது என்றார். மேலும், மைதானத்திற்கு வெளியே எப்படி இருந்தாலும், வீரர்கள் தேசிய அணிக்காக விளையாடும்போது, இரு தரப்பிலும் ஆக்ரோஷம் இருக்க வேண்டும் என்றும், அதுதான் போட்டியை விறுவிறுப்பாக்கும் என்றும் கூறினார். இந்நிலையில், காம்பிரின் கூற்றை நிராகரித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாஹித் அப்ரிடி, "நாங்கள் கிரிக்கெட் வீரர்கள். எங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். எனவே அன்பு மற்றும் பரஸ்பர மரியாதை வெளிப்படுத்துவது அவசியம். மைதானத்தில் மட்டுமல்லாது, அதற்கு வெளியேயும் வாழ்க்கை உள்ளது." என்றார்.