LOADING...
2028 ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டியை நடத்துகிறது நைட் ரைடர்ஸ்! லாஸ் ஏஞ்சலஸ் நகரில் பிரம்மாண்ட மைதானத்தைத் திறந்தது
லாஸ் ஏஞ்சலஸ் நகரில் பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானத்தைத் திறந்தது நைட் ரைடர்ஸ்!

2028 ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டியை நடத்துகிறது நைட் ரைடர்ஸ்! லாஸ் ஏஞ்சலஸ் நகரில் பிரம்மாண்ட மைதானத்தைத் திறந்தது

எழுதியவர் Sekar Chinnappan
Jul 02, 2026
07:24 pm

செய்தி முன்னோட்டம்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் நைட் ரைடர்ஸ் குழுமம், சர்வதேச கிரிக்கெட் உள்கட்டமைப்பில் ஒரு உலகளாவிய சாதனையைப் படைத்துள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள பொமோனா பகுதியில், சர்வதேச தரத்திலான தங்களின் புதிய சொந்த கிரிக்கெட் மைதானத்தை நைட் ரைடர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்துள்ளது. இதன் மூலம் வெளிநாட்டில் சொந்தமாக ஒரு சர்வதேச கிரிக்கெட் மைதானத்தைக் கட்டி முடித்த முதல் உலகளாவிய கிரிக்கெட் ஃபிரான்சைஸ் என்ற புதிய வரலாற்று சாதனையை ஷாருக்கானின் நைட் ரைடர்ஸ் குழுமம் தனதாக்கியுள்ளது.

ஒலிம்பிக் போட்டி

2028 லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தயாராகும் மைதானம்

இந்த மைதானத்தின் திறப்பு விழாவைக் கொண்டாடும் வகையில், தற்பொழுது அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் 16 ஆவது லீக் போட்டி இந்த புதிய மைதானத்தில் முதன்முறையாக நடத்தப்பட்டது. இந்த முதலாவது வரலாற்றுப் போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணியும், உள்ளூர் அணியான லாஸ் ஏஞ்சலஸ் நைட் ரைடர்ஸும் மோதிக்கொண்டன. விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. இந்த மைதானம் வெறும் உள்நாட்டுப் போட்டிகளுக்கு மட்டுமின்றி, வரவிருக்கும் 2028 லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் போட்டிகளின் அதிகாரப்பூர்வ கிரிக்கெட் போட்டிகளை நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ளது இதன் கூடுதல் சிறப்பாகும்.

ஐசிசி

ஐசிசி தலைவர் ஜெய் ஷாவுக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான்

இந்த கிரிக்கெட் மைதான திறப்பைக் கொண்டாடும் விதமாக, நைட் ரைடர்ஸ் அணியின் இணை உரிமையாளரான நடிகர் ஷாருக்கான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார். பல வருடங்களாகத் தான் கண்ட ஒரு நீண்டகாலக் கனவு இன்று நனவாகியுள்ளது என்று குறிப்பிட்ட அவர், இந்த லட்சியத் திட்டத்தை நிஜமாக்கத் தங்களுக்கு முழுமையான ஆதரவை வழங்கிய சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கும், அதன் தலைவர் ஜெய் ஷாவுக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். இந்த மைதானம் வெறும் விளையாட்டிற்கு மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மற்றும் பொழுதுபோக்கு விரும்பிகளுக்கும் ஒரு சிறந்த இடமாக மாறும் என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

வசதிகள்

சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட வசதிகள்

ஃபேர்ப்ளெக்ஸ் பொமோனா பகுதியில் மிகக் குறுகிய காலத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த அதிநவீன மைதானம், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் விதிகளின்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தை உருவாக்குவதற்காக மட்டும் சுமார் 32,000 மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான மண் தோண்டப்பட்டு நிலம் சமன்படுத்தப்பட்டுள்ளது. இரவு நேரப் போட்டிகளை மிகத் தெளிவாகவும், சர்வதேச அளவில் ஒளிபரப்பு செய்யவும் வசதியாக 120 அடி உயரமுள்ள 6 பிரம்மாண்ட மின்விளக்கு கோபுரங்கள் அங்கே அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மைதானத்தின் மையப் பகுதியில் ஒரே நேரத்தில் பல ஆட்டங்களை நடத்தும் வகையில் 8 இயற்கை புல்வெளி ஆடுகளங்கள் அமைக்கப்பட்டுள்ளது அமெரிக்க கிரிக்கெட் வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

Advertisement