
உலக சாம்பியன்ஷிப்: அரையிறுதியில் தோல்வி; வெண்கலம் வென்றனர் சாத்விக்-சிராக் ஜோடி
செய்தி முன்னோட்டம்
BWF உலக சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதிப் போட்டியில், இந்தியாவின் முன்னணி ஆடவர் இரட்டையர் பேட்மிண்டன் ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர் தோல்வியைத் தழுவி வெண்கலப் பதக்கத்தைப் பெற்றனர். பாரிஸில் நடைபெற்ற பரபரப்பான மூன்று சுற்று அரையிறுதிப் போட்டியில், அவர்கள் சீனாவின் சென் போ யாங் மற்றும் லியு யி ஆகியோரிடம் தோல்வியடைந்தனர். முதல் சுற்றை 19-21 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த இந்திய ஜோடி, இரண்டாவது சுற்றில் 21-18 என மீண்டு வந்து, போட்டியை மூன்றாவது சுற்றுக்கு கொண்டு சென்றனர். ஆனால், கடைசிச் சுற்றில் சீன ஜோடி 21-12 என்ற புள்ளிக்கணக்கில் எளிதாக வென்று, இந்திய ஜோடியின் உலக சாம்பியன்ஷிப் பயணத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.
சாதனை
சாத்விக் - சிராக் ஜோடி
இந்தத் தோல்வி ஏற்பட்டாலும், சாத்விக் மற்றும் சிராக்கிற்கு இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். இது 2022 இல் ஜப்பானில் வென்ற வெண்கலப் பதக்கத்திற்குப் பிறகு, உலக சாம்பியன்ஷிப் போட்டியில் அவர்களின் இரண்டாவது பதக்கமாகும். முன்னதாக, காலிறுதிப் போட்டியில் மலேசியாவின் சோ மற்றும் சியா ஜோடியையும், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சீனாவின் லியாங் மற்றும் வாங் ஜோடியையும் தோற்கடித்து இந்திய ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சென் போ யாங் மற்றும் லியு யி ஜோடி இனி இறுதிப் போட்டியில் தென் கொரியாவின் சியோ மற்றும் கிம் ஜோடியை எதிர்கொள்ளும்.