கொரியா ஓபன் பாட்மின்டன் தொடரின் இறுதிப்போட்டியில் வென்றது இந்தியா
தென் கொரியாவில் நடைபெற்று வரும் கொரியா ஓபன் பாட்மின்டன் தொடரின், அனைத்து பிரிவுகளுக்குமான இறுதிப் போட்டிகளும் இன்று நடைபெற்றது. இன்றைய போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் தங்களை எதிர்த்துப் போட்டியிட்ட உலகின் முன்னணி ஜோடியான ஃபஜர் ஆல்ஃபியன் மற்றும் முகமது ரியன் அர்டியன்டோ ஜோடியை வீழ்த்தி கொரிய ஓபன் பட்டத்தை தட்டிச் சென்றனர் இந்தியாவைச் சேர்ந்த சிராஜ் ரெட்டி மற்றும் சாத்விக்சாய் ராங்கிரெட்டி ஜோடி. இன்றைய இறுதிப்போட்டிக்கு முன்பாக நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், ஆண்கள் இரட்டையர் பாட்மின்டன் தரவரிசைப் பட்டியலில் இரண்டாமிடத்தில் இருந்த சீனாவைச் சேர்ந்த லியாங் வெய் கெங் மற்றும் வாங் சாங்கை இவர்கள் வீழ்த்தியிருந்தனர்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் அசத்தும் இந்திய ஜோடி:
அந்த அரையிறுதிப் போட்டியில் தங்களை எதிர்த்துப் போட்டியிட்ட சீன ஜோடியை 21-15, 24-22 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்திருந்தது இந்திய ஜோடி. இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்தோனேஷிய ஜோடியிடம் 17-21 என முதல் செட்டை இழந்தாலும், அதனைத் தொடர்ந்து வந்த இரண்டு செட்களையும் 21-13, 21-14 என ஆதிக்கம் செலுத்தி கைப்பற்றியிருக்கின்றனர். முன்னதாக, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற ஸ்விஸ் ஓபன் மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப்களில் பேட்மின்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவுகளில் வெற்றி பெற்றதையடுத்து, தற்போது கொரிய ஓபன் பட்டத்தையும் தட்டிச் சென்றிருக்கிறது இந்த ஜோடி.