டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து இரு போட்டிகளில் சதம் அடித்த முதல் வீரர்; சஞ்சு சாம்சன் சாதனை
டர்பனில் உள்ள கிங்ஸ்மீட்டில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 8) நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் தொடக்க தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் (107 ரன்கள்) அதிரடியாக சதம் அடித்து அசத்தினார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில், சஞ்சு சாம்சனுக்கு இது இரண்டாவது சதமாகும். அவர் முதல் சதத்தை, கடைசியாக நடந்த வங்கதேச தொடரின் கடைசி போட்டியில் முடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், இந்திய கிரிக்கெட் அணிக்காக டி20 கிரிக்கெட்டில் பல சதங்கள் அடித்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையை சஞ்சு சாம்சன் பெற்றுள்ளார். இதற்கு முன்னர் ரோஹித் ஷர்மா (5), சூர்யகுமார் யாதவ் (4) மற்றும் கேஎல் ராகுல் (2) மட்டுமே இந்த சாதனையை செய்திருந்தனர்.
இந்தியா-தென்னாப்பிரிக்கா டி20 போட்டிகளில் அதிக ஸ்கோர்
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையிலான டி20 போட்டியில் சஞ்சு சாம்சனின் 107 ரன்கள் இப்போது அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் ஆகும். முன்னதாக, 2022இல் கவுகாத்தியில் டேவிட் மில்லர் ஆட்டமிழக்காமல் 106 ரன்களை எடுத்திருந்ததே சாதனையாக இருந்தது. இதற்கிடையே, தொடர்ச்சியாக இரண்டு டி20 போட்டிகளில் சதம் விளாசிய முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையையும் சஞ்சு சாம்சன் படைத்துள்ளார். உலக அளவில் குஸ்டாவ் மெக்கியோன், ரிலீ ரோசோவ் மற்றும் பில் சால்ட் ஆகியோருக்குப் பிறகு, இந்த சாதனையை படைத்த நான்காவது பேட்டர் ஆவார். மேலும், இந்த போட்டியில் 10 சிக்ஸர் அடித்ததன் மூலம், 2017ல் ஒரு இன்னிங்ஸில் 10 சிக்ஸர் அடித்த ரோஹித்தின் சாதனையை சமன் செய்தார்.