அணித் தேர்வில் ரவி சாஸ்திரி-விராட் கோலி தான் பெஸ்ட்; முன்னாள் வீரர் கருத்து
கேப்டவுனில் ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கும் இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முகேஷ் குமாருக்கு அணி நிர்வாகம் வாய்ப்பு அளிக்கலாம் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார். இருப்பினும், பிரசித் கிருஷ்ணா நீக்கப்பட்டால் அது அநியாயமாகும் என்றும் அவர் கூறினார். ரவி சாஸ்திரி-விராட் கோலி காலத்தில் இருந்த முந்தைய நிர்வாகம் இருந்திருந்தால், அது விளையாடும் லெவனில் மாற்றங்களைச் செய்திருக்கும் என்றும் மஞ்ச்ரேக்கர் சுட்டிக்காட்டினார். ரவி சாஸ்திரி அணியின் பயிற்சியாளராகவும், விராட் கோலி அணியின் கேப்டனாகவும் இருந்தபோது, அணியின் நலனுக்காக துணிந்து பல முடிவுகளை எடுத்ததாகவும் அவர் பாராட்டினார்.
பிரசித் கிருஷ்ணாவுக்கு பாராட்டு
பிரசித் கிருஷ்ணா குறித்து பேசிய மஞ்ச்ரேக்கர், "பிரசித் கிருஷ்ணாவை முதல் போட்டிக்குப் பிறகு நீக்குவது என்பது கொஞ்சம் கடினமாக இருக்கும். அவர் தனது உயரத்தை சிறப்பாக பயன்படுத்துகிறார். அவரது வேகமும் வலிமையும் கொண்ட ஷார்ட் பந்துகள் அணிக்கு வலிமையை கொடுக்கும்." என்றார். அதே சமயம், முகேஷ் குமார் அணியில் இணைக்கப்படுவதை யாரும் தவறாக நினைக்க மாட்டார்கள் எனக் கூறிய மஞ்ச்ரேக்கர், இருந்தாலும், பிரசித் கிருஷ்ணாவுக்கு பதிலாக அவர் சேர்க்கப்படுவது நியாயமல்ல என பலர் நினைக்கலாம் என்று கூறியுள்ளார். இந்த சமயத்தில் ரவி சாஸ்திரி-விராட் கோலி காம்போ இருந்திருந்தால் இரக்கமற்று முடிவு எடுத்திருக்கும் எனக் கூறிய அவர், தற்போது எத்தகைய முடிவு எடுக்கப்படும் என பொறுத்திருந்து பார்க்கலாம் எனக் கூறினார்.