SAFF சாம்பியன்ஷிப் கால்பந்து 2026: 28 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு, பாகிஸ்தானுடன் முதல் போட்டி
செய்தி முன்னோட்டம்
வங்கதேச தலைநகர் டாக்காவில் வரும் நவம்பர் 5 முதல் 17 வரை நடைபெறவுள்ள சாஃப் சாம்பியன்ஷிப் (SAFF Championships) சர்வதேச கால்பந்து தொடருக்கான 28 வீரர்கள் கொண்ட இந்திய அணியை அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (AIFF) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய முதன்மை அணி நியூசிலாந்துக்கு எதிரான இரு சர்வதேச நட்பு போட்டிகளில் விளையாட உள்ளதால், இத்தொடருக்கு 23 வயதுக்குட்பட்டோருக்கான தலைமைப் பயிற்சியாளர் நௌஷாத் மூசா பொறுப்பில் இரண்டாம் கட்ட அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் பிபியானோ பெர்னாண்டஸ் உதவிப் பயிற்சியாளராகச் செயல்பட உள்ளார்.
பயண ஏற்பாடுகள்
ஐஎஸ்எல் கிளப்புகளின் சவால்
இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை வரும் நவம்பர் 5-ஆம் தேதி எதிர்கொள்கிறது.
இப்போட்டி ஃபிஃபா சர்வதேச விண்டோ காலத்திற்கு (நவம்பர் 9-17) முன்பாக வருவதால், நடைபெற்று வரும் இந்தியன் சூப்பர் லீக் (ISL) தொடரிலிருந்து வீரர்களை விடுவிப்பதில் கிளப் நிர்வாகங்களிடையே தொடக்கத்தில் தயக்கம் நிலவியது. எனினும் பேச்சுவார்த்தைக்குப் பின் வீரர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இதன்படி முதற்கட்டமாக 18 வீரர்கள் நவம்பர் 3 அன்று கொல்கத்தாவிலிருந்து டாக்கா புறப்படுகின்றனர்.
மீதமுள்ள 10 வீரர்கள் அடுத்தடுத்த நாட்களில் அணியுடன் இணைவார்கள் என கூட்டமைப்பின் துணைப் பொதுச்செயலாளர் எம். சத்யநாராயணன் தெரிவித்தார்.
குழு விவரங்கள்
10-வது பட்டத்திற்கான இலக்கு
நடப்பு சாம்பியனான இந்தியா 'குரூப் பி' பிரிவில் பாகிஸ்தான் மற்றும் மாலத்தீவு அணிகளுடன் இடம்பெற்றுள்ளது.
நவம்பர் 5-ல் பாகிஸ்தானுடன் தொடங்கும் இந்தியா, நவம்பர் 11 அன்று மாலத்தீவை எதிர்கொள்கிறது. 'குரூப் ஏ' பிரிவில் வங்கதேசம், இலங்கை, பூடான் அணிகள் உள்ளன.
இரு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் நவம்பர் 14 அரையிறுதிக்கு முன்னேறும். இறுதிப்போட்டி நவம்பர் 17 அன்று டாக்காவில் உள்ள தேசிய மைதானத்தில் அரங்கேறும்.
கடந்த 2023-ல் பெங்களூருவில் குவைத்தை வீழ்த்தி மகுடம் சூடிய இந்தியா, இம்முறை தனது 10-வது சாஃப் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று புதிய சாதனை படைக்க தீவிர முனைப்புடன் தயாராகி வருகிறது.
அணி விவரம்
சாஃப் சாம்பியன்ஷிப் 2026 இந்திய அணி
கோல்கீப்பர்கள்: அர்ஷ் அன்வர் ஷேக், மோகன்ராஜ் கே, பிரியான்ஷ் துபே.
டிஃபெண்டர்கள்: அப்துல் ரபீஹ், பிஜாய் வர்கீஸ், சிங்லென்சனா சிங், மிங்தான்மாவியா ரால்டே, கைமின்டாங் லுங்டிம், முகமது உவைஸ், நாதன் ரோட்ரிக்ஸ், ரோனி கார்புடான், சந்திப் மாண்டி.
மிட்பீல்டர்கள்: அபிஷேக் சூர்யவன்ஷி, அடிசன் சிங், பிரிசன் பெர்னாண்டஸ், எபிந்தாஸ் யேசுதாசன், ஃபாரூக் சவுத்ரி, மெக்கார்ட்டன் நிக்சன், மாங்க்லெந்தாங் கிப்கென், நிகில் பிரபு, நௌஃபல் பிஎன், ரிக்கி ஜான், சுரேஷ் சிங் வாங்ஜாம்.
ஃபார்வர்டர்கள்: இர்பான் யத்வாத், லிஸ்டன் கொலாக்கோ, முகமது சுஹைல், விஷ்ணு பிவி, சுஹைல் அகமது பட்.