Page Loader
இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது டெஸ்ட்: 55 ரன்களில் தென்னாப்பிரிக்காவை சுருட்டிய இந்தியா
55 ரன்களில் தென்னாப்பிரிக்காவை சுருட்டிய இந்தியா

இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது டெஸ்ட்: 55 ரன்களில் தென்னாப்பிரிக்காவை சுருட்டிய இந்தியா

எழுதியவர் Sekar Chinnappan
Jan 03, 2024
04:42 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையே புதன்கிழமை (ஜனவரி 3) கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்கா 55 ரன்களில் சுருண்டது. முன்னதாக, போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்து களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் நிதானமான ஆட்டத்தை தொடங்கினாலும், நான்காவது ஓவரில் முதல் விக்கெட்டாக ஐடென் மார்க்ரம் 2 ரன்களில் வெளியேறினார். அதைத் தொடர்ந்து வரிசையாக அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ, பத்தாவது ஓவரில் 15 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது தத்தளித்தது.

South Africa all out for 55 runs in first innings

55 ரன்களுக்கு ஆல் அவுட்

டேவிட் பெடிங்ஹாம் மற்றும் கைல் வெர்ரைன் ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து நிலைத்து நிற்க முயற்சி செய்தனர். ஆனாலும், இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்த ஜோடி 16வது ஓவரில் பிரிந்தது. டேவிட் பெடிங்ஹாம் 12 ரன்களில் வெளியேற, கைல் வெர்ரைன் 15 ரன்களில் வெளியேறினார். மற்ற அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்கத்தில் அவுட்டான நிலையில், 23.2 ஓவர்களில் 55 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளையும், ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் முகேஷ் குமார் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

Lowest score by a team against India in test

இந்தியாவுக்கு எதிராக டெஸ்டில் ஒரு அணியின் குறைந்தபட்ச ஸ்கோர்

தென்னாப்பிரிக்கா 55 ரன்கள் எடுத்ததன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக ஒரு இன்னிங்சில் எதிரணி எடுத்த குறைந்தபட்ச ஸ்கோராக இது பதிவாகியுள்ளது. இதற்கு முன்பாக மும்பை வான்கடே மைதானத்தில் 2021இல் நியூசிலாந்து அணி 62 ரன்கள் எடுத்திருந்ததே, இந்த வகையில் இந்தியாவுக்கு எதிராக ஒரு அணியின் மோசமான சாதனையாக இருந்தது. இதற்கடுத்த இடங்களில், 2015இல் நாக்பூரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 79, 2021இல் அகமதாபாத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 81 மற்றும் 1990இல் சண்டிகரில் இலங்கைக்கு எதிராக 82 ரன்கள் எடுத்ததும் மோசமான இதர சாதனைகளாக உள்ளன. மற்ற அனைத்து ஸ்கோர்களும் உள்நாட்டில் எடுக்கப்பட்ட நிலையில், தற்போது வெளிநாட்டு மண்ணில் இந்தியாவுக்கு எதிராக குறைந்த ஸ்கோர் பதிவாகியுள்ளது.

36th time 55 or low score in test

55 ரன்களுக்குள் 36வது முறையாக அவுட்

இதுவரை நடந்த சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் 55 அல்லது அதற்கும் குறைவான ரன்களில் ஒரு அணி அவுட்டாவது இது 36வது முறையாகும். இதில், தற்போது தென்னாப்பிரிக்கா வீழ்ந்த கேப் டவுனில் மட்டும் அதிகபட்சமாக 7 முறை 55 அல்லது அதற்கும் கீழ் அணிகள் ஆல் அவுட் ஆகியுள்ளன. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் லார்ட்ஸ் மைதானம் 6 முறையுடன் உள்ளன. இதற்கிடையே, 1992இல் தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி மீண்டும் கிரிக்கெட்டிற்கு திரும்பிய பிறகு அந்த அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் பெறும் குறைந்தபட்ச ஸ்கோராகவும் இது பதிவாகியுள்ளது. இதற்கு முன்னர் 2018இல் இலங்கைக்கு எதிராக காலியில் 73 ரன்கள் எடுத்ததே குறைந்தபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohammad Siraj bowling key stats

முகமது சிராஜ் பந்துவீச்சு சிறப்பம்சங்கள்

முகமது சிராஜ் இந்த போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 9 ஓவர்கள் பந்துவீசி 15 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த ரன்களை விட்டுக்கொடுத்து குறைந்தபட்சம் ஐந்து விக்கெட் வீழ்த்திய நான்காவது இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த பட்டியலில், ஜஸ்ப்ரீத் பும்ரா (2019), வெங்கடபதி ராஜு (1990) மற்றும் ஹர்பஜன் சிங் (2006) ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர். மேலும், தென்னாப்பிரிக்காவில் இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவரின் மூன்றாவது சிறந்த பந்துவீச்சாகவும் முகமது சிராஜின் பந்துவீச்சு அமைந்துள்ளது. இந்த பட்டியலில் தலா 7 விக்கெட்டுகளுடன் ஷர்துல் தாக்கூர் மற்றும் ஹர்பஜன் சிங் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.