
பாரிஸ் ஒலிம்பிக் கூடைப்பந்தாட்ட தகுதிப் போட்டிகளில் விளையாட ரஷ்யாவுக்கு தடை
செய்தி முன்னோட்டம்
2024 பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு முன்னதாக இந்த ஆண்டு நடக்க உள்ள கூடைப்பந்து தகுதிப் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கூடைப்பந்தாட்டத்தில் விளையாட ரஷ்யாவுக்கு தடை விதிக்கப்படும் என்று சர்வதேச கூடைப்பந்து கூட்டமைப்பின் (பிபா) செயற்குழு செவ்வாயன்று (ஏப்ரல் 18) அறிவித்தது.
முந்தைய 2019 ஆம் ஆண்டு பிபா ஆண்கள் உலக கோப்பையில் 12 வது இடத்தில் இருந்த ரஷ்யா, கடந்த 2012 இல் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றது.
மேலும் முன்னாள் என்பிஏ வீரர் ஆண்ட்ரி கிரிலென்கோவை உள்ளடக்கிய அணியுடன் பங்கேற்று வெண்கலப் பதக்கத்தையும் வென்றது.
இந்நிலையில், உக்ரைன் மீதான போர் காரணமாக ரஷ்ய வீரர்களுக்கு பிபா தடை விதித்துள்ளது.
FIBA announcement
சர்வதேச கூடைப்பந்து கூட்டமைப்பு அறிக்கை
ரஷ்யாவுக்கான தடை குறித்து பிபா வெளியிட்டுள்ள அறிக்கையில், "மார்ச் 28 அன்று வெளியிடப்பட்ட சர்வதேச போட்டிகளில் ரஷ்ய அல்லது பெலாரஷ்யன் பாஸ்போர்ட்டுடன் விளையாட்டு வீரர்கள் பங்கேற்பது குறித்த ஐஓசி பரிந்துரைகளைப் பின்பற்றி, ரஷ்ய ஆண்கள் தேசிய அணியை பதிவு செய்ய அனுமதிக்க வேண்டாம் என்று பிபா நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது" என்று தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு நடக்க உள்ள ஒலிம்பிக்கிற்கு முந்தைய கூடைப்பந்து தகுதிச் சுற்று போட்டியில் மொத்தம் 40 நாடுகள் பங்கேற்கின்றன.
இந்நிலையில் ரஷ்யா மீதான தடை காரணமாக, ரஷ்ய அணிக்கு பதிலாக பல்கேரியா சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு ஆகஸ்ட் 12 முதல் 20 வரை நடைபெறும், ஐந்து வெற்றியாளர்கள் 2024இல் பிபா ஒலிம்பிக் தகுதிப் போட்டிகளில் இடங்களைப் பெறுவார்கள்.