ஐபிஎல்லில் இனி ஒரு ஓவருக்கு இரண்டு பவுன்சர்களை வீச அனுமதி
ஐபிஎல் 2024க்கான புதிய விதிகளின்படி, பந்து வீச்சாளர்கள் ஒரு ஓவருக்கு இனி இரண்டு பவுன்சர்களை வீச அனுமதிக்கப்படுவார்கள். டி20 கிரிக்கெட் போட்டியானது பேட்டரை மையமாகக் கொண்டதாக மாறியுள்ள நிலையில், இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) பேட்டிங்கிற்கும் பந்துவீச்சுக்கும் இடையே சமமான போட்டியை வழங்கும் முயற்சியாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 2023-24 சையத் முஷ்டாக் அலி டிராபியில் ஏற்கனவே இதை வெற்றிகரமாக சோதனை செய்த நிலையில், அதில் பெறப்பட்ட ஆலோசனைகளின்படி ஐபிஎல்லிலும் இந்த விதியை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.
இம்பாக்ட் பிளேயர் விதியை நீக்க கோரிக்கை
பவுன்சரை கூடுதலாக வழங்கும் விதியை அமல்படுத்தியுள்ள பிசிசிஐ, இம்பாக்ட் பிளேயர் விதியை நீக்குவதற்கான கோரிக்கைகள் இருந்தபோதிலும், ஐபிஎல் 2024 சீசனில் அதை தொடர முடிவு செய்துள்ளது. இந்த விதி இந்திய ஆல்ரவுண்டர்களின் வளர்ச்சிக்கு இடையூறாக இருப்பதால், இந்த விதியை நீக்க வேண்டும் என்று வாசிம் ஜாபர், ஆகாஷ் சோப்ரா உள்ளிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இம்பாக்ட் பிளேயர் விதியின்படி, போட்டியின் போது விளையாடும் 11 பேரில் இருந்து ஒரு ஆட்டக்காரருக்குப் பதிலாக ஒரு இன்னிங்ஸின் எந்த நேரத்திலும் ஒரு அணி மாற்று வீரரைக் கொண்டு வரலாம். இது போட்டிகளில் அடிக்கடி பந்து வீச வேண்டிய ஆல்ரவுண்டர்களுக்கான வாய்ப்புகளை குறைத்துள்ளதாக பரவலாகக் கூறப்படுகிறது.