கால்பந்து வரலாற்றில் 900 கோல்களை எட்டி சாதனை படைத்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ
போர்ச்சுகலைச் சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது 900வது மைல்கல் கோலை எட்டி சாதனை படைத்துள்ளார். போர்ச்சுகல் தனது முதல் யுஇஎப்ஏ நேஷன்ஸ் லீக் போட்டியில் செப்டம்பர் 5 அன்று குரோஷியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. இதில் 39 வயதான ரொனால்டோ கோல் அடித்ததன் மூலம் கால்பந்து வரலாற்றில் 900 கோல்களை எட்டிய முதல் வீரர் ஆனார். இதில் நாட்டிற்காக விளையாடியது மற்றும் கிளப் அணிகளுக்காக விளையாடியதும் அடங்கும். ரொனால்டோ ஐரோப்பிய கிளப் போட்டிகளில் ஆல் டைம் டாப் ஸ்கோரரும் ஆவார். அவரது கோல்-ஸ்கோரிங் சாதனைகள் அவரது வாழ்க்கை முழுவதும் அவரது அணிகளுக்கு பல வெற்றிகளில் முக்கிய பங்கு வகித்துள்ளது.
அதிக கோல் அடுத்தவர்களின் பட்டியல்
15 ஆண்டுகளுக்கும் மேலாக, ரொனால்டோ பெரிய கால்பந்து விருதுகளுக்காக லியோனல் மெஸ்ஸியுடன் நெருங்கிய போட்டியில் இருந்து வருகிறார். இருப்பினும், கோல்கள் அடித்ததில் ரொனால்டோ தான் முன்னணியில் உள்ளார். ரொனால்டோ 900 கோல்களை எட்டிய நிலையில் லியோனல் மெஸ்ஸி 838 கோல்களுடன் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். இதற்கிடையே, தற்போது சவுதி அரேபிய கிளப் அல் நாசர் அணிக்காக விளையாடி வரும் ரொனால்டோ கடந்த சீசனில் 35 கோல்கள் அடித்து புதிய லீக் சாதனையை படைத்துள்ளார். 1,000 தொழில்முறை கோல்களை அடைவதில் உறுதியாக உள்ள ரொனால்டோ, தனது சிறப்பான ஸ்கோரிங் வேகத்தைத் தொடருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.