முடிவுக்கு வரும் 19 ஆண்டுகால சகாப்தம்! ஞாயிற்றுக்கிழமை தனது கடைசிப் போட்டியில் விளையாடுகிறாரா ரோஹித் சர்மா?
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர ஆட்டக்காரருமான ரோஹித் சர்மா, வரும் ஜூலை 19 நடைபெறவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற வாய்ப்புள்ளதாக டைம்ஸ் நவ் செய்தி தெரிவித்துள்ளது. 39 வயதான ரோஹித் சர்மாவின் 19 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் சகாப்தம் இப்போட்டியுடன் முடிவுக்கு வரவுள்ளது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியத் தேர்வுக் குழு 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு இளைய தலைமுறை வீரர்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு தொடர்ச்சியான வாய்ப்புகளை வழங்கி தயார்படுத்த தேர்வுக் குழு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து ரோஹித் சர்மா மற்றும் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரிடம் ஏற்கனவே ஆலோசிக்கப்பட்டுள்ளது.
ஓய்வு
ரோஹித்தின் ஓய்வு முடிவும் பிசிசிஐ நிபந்தனையும்
ஓய்வு பெறுவது குறித்த இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் ரோஹித் சர்மாவிடமே வழங்கப்பட்டுள்ளது.
எனினும், தற்போதைய இங்கிலாந்து தொடருக்கு பிறகு ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா தேர்ந்தெடுக்கப்பட மாட்டார் என்பதைத் தேர்வுக் குழு தெளிவுபடுத்தியுள்ளது.
ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்தும் அவர் விலகும் பட்சத்தில், அது அவரது சர்வதேச கிரிக்கெட் பயணத்தின் அதிகாரப்பூர்வ முற்றுப்புள்ளியாக அமையும்.
தற்போதைய இங்கிலாந்துத் தொடரில் ரோஹித் சர்மா ரன்களை குவிக்க திணறி வருகிறார்.
எட்ஜ்பாஸ்டன் மற்றும் கார்டிஃப் போட்டிகளில் முறையே 11 மற்றும் 26 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளதும் இந்த மாற்றத்தை வேகப்படுத்தியுள்ளது.