வந்த வேகத்தில் வெளியேறிய ஹிட்மேன்: முதல் பந்திலேயே ரோஹித் ஷர்மா கோல்டன் டக்; ரசிகர்கள் சோகம்
செய்தி முன்னோட்டம்
விஜய் ஹசாரே கோப்பை (Vijay Hazare Trophy) கிரிக்கெட் தொடரில், சிக்கிம் அணிக்கு எதிரான முதல் போட்டியில் 155 ரன்கள் குவித்து அசத்திய மும்பை அணி கேப்டன் ரோஹித் ஷர்மா, இன்று (டிசம்பர் 26) நடைபெற்ற உத்தரகாண்ட் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் 'கோல்டன் டக்' (Golden Duck) ஆகி ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளார். தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே அவர் ஆட்டமிழந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
பவுன்சர்
பவுன்சர் பந்து மற்றும் ரசிகர்களின் ஏமாற்றம்
உத்தரகாண்ட் வேகப்பந்து வீச்சாளர் தேவேந்திர சிங் போரா வீசிய பவுன்சர் பந்தை எதிர்கொண்ட ரோஹித் ஷர்மா, அதனைத் தனது டிரேட்மார்க் 'புல் ஷாட்' (Pull Shot) ஆட முயன்றார். ஆனால், பந்து சரியாகப் பேட்டில் சிக்காததால் டீப் பகுதியில் இருந்த ஃபீல்டரிடம் கேட்ச் ஆனது. அந்த ஃபீல்டர் பந்தை முதலில் நழுவவிட்டாலும், இரண்டாவது முயற்சியில் கச்சிதமாகப் பிடித்து ரோஹித்தை வெளியேற்றினார். ஜெய்ப்பூரில் ரோஹித்தின் ஆட்டத்தைக் காணக் கூடியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள், அவர் முதல் பந்திலேயே அவுட்டானதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். இது தொடர்பான வீடியோவை ரசிகர் ஒருவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Rohit Sharma’s catch was almost dropped by the fielder, but he held on to it on the second attempt.😢💔 pic.twitter.com/Fcb1965xfW
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) December 26, 2025
விவாதம்
ரோஹித் மற்றும் கோலியின் ஃபார்ம் குறித்த விவாதம்
டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் எதிர்கால ஃபார்ம் மற்றும் உத்வேகம் குறித்துக் கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன. ஆனால், சமீபத்திய ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா தொடர்களில் இருவரும் சிறப்பாக விளையாடி தங்களது ஃபார்மை நிரூபித்தனர். உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடுவது கட்டாயம் என்ற பிசிசிஐ விதியின்படி, இருவரும் தற்போது விஜய் ஹசாரே தொடரில் பங்கேற்று வருகின்றனர். இந்தப் போட்டியில் ரோஹித் டக் அவுட்டான போதிலும், மற்றொரு போட்டியில் விராட் கோலி மீண்டும் ஒரு அரைசதம் கடந்து அசத்தியுள்ளார்.