
தோல்வியை ஜீரணிக்க முடியல; ஒருநாள் உலகக்கோப்பை குறித்து மனம் திறந்த ரோஹித் ஷர்மா
செய்தி முன்னோட்டம்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வியைத் தழுவிய பிறகு முதல் முறையாக, கேப்டன் ரோஹித் ஷர்மா தனது வலியை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.
இந்த தொடரில் தொடர்ந்து 10 போட்டிகளில் வெற்றி பெற்ற போதிலும், அகமதாபாத்தில் நடந்த இறுதிப்போட்டியில் டிராவிஸ் ஹெட்டின் சதத்தால் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. இந்த தோல்விக்கு பிறகு, ரோஹித் ஷர்மா சமூக ஊடகங்களில் இருந்து விலகியே இருந்தார்.
மேலும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் இருந்தும் விலகினார்.
இருப்பினும், தற்போது மவுனத்தை உடைத்து இன்ஸ்ட்டாகிராமில் வெளியிட்டுள்ள ஒரு உரையாடலில் மன வேதனையை எவ்வாறு சமாளிப்பது என்று தனக்குத் தெரியவில்லை என்று கூறினார்.
Rohit Sharma feels about ODI World Cup loss
ரோஹித் ஷர்மா பேச்சின் முழு விபரம்
இன்ஸ்டாகிராமில் ஒரு நேர்மையான மற்றும் உணர்ச்சிவசப்பட்ட உரையாடலில், உலகக்கோப்பை இறுதிபோட்டியின் தோல்வியை எவ்வாறு சமாளிப்பது என்று தனக்குத் தெரியாது என்று ரோஹித் ஷர்மா ஒப்புக்கொண்டார்.
ஆனால், குடும்பத்தினர், நண்பர்கள் என உடனிருந்த அனைவரும் என்னை தேற்றி முன்னேறிச் செல்ல உந்துதலைக் கொடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.
எப்படியிருப்பினும், சிறுவயதில் ஒருநாள் உலகக்கோப்பையை பார்த்து வளர்ந்தவன் என்பதன் அடிப்படையில், அதை வெல்வதே சிறந்த பரிசாக இருந்தது என்பதை மறுக்க முடியாது எனக் கூறினார்.
அதே சமயத்தில், ஒட்டுமொத்தமாக அணி 2023 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்டதாகவும், இதுபோல் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடுவது எல்லா முறையும் நடக்காது எனத் தெரிவித்து அணியை பாராட்டினார்.