'ஆனந்த கண்ணீர் வருவது நிச்சயம்' : உணர்ச்சிவசப்பட்ட கிரிக்கெட் வீரர் ரின்கு சிங்
இளம் கிரிக்கெட் வீரர் ரின்கு சிங், வரவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்துள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிக்காக ஐபிஎல்லில் சிறப்பாக செயல்பட்டதற்கான பரிசாக இந்த வாய்ப்பு அமைந்துள்ளது. முன்னதாக, ஐபிஎல் 2023இன் போது குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக கேகேஆர் வெற்றிபெற, இறுதி ஓவரில் தொடர்ச்சியாக ஐந்து சிக்ஸர்களை அடித்து, சிறந்த ஃபினிஷர் அவதாரம் எடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தனது வாழ்க்கையில் கடுமையான நிதி நெருக்கடிகளை போராடி எதிர்த்து வந்துள்ள ரின்கு சிங், இந்திய அணியில் இடம் கிடைத்தபோது சற்று உணர்ச்சிவசப்பட்டதாகவும், முதல் முறையாக இந்திய ஜெர்சியை அணிந்த பிறகு கண்ணீர் விடுவது உறுதி என்றும் கூறியுள்ளார்.
இந்திய அணிக்காக விளையாடுவது கனவு : ரின்கு சிங்
ரின்கு சிங், தான் எதிர்காலத்தைப் பற்றி அதிகம் சிந்திக்கவில்லை என்றும், அவ்வாறு செய்தால் அது தனக்கு மேலும் சுமையை சேர்க்கும் என்றும் கூறியுள்ளார். மேலும், "எல்லோரும் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்றும் அந்த ஜெர்சியை அணிய வேண்டும் என்றும் கனவு காண்கிறார்கள். தொழில்முறை கிரிக்கெட்டில் விளையாடும் அனைவருக்கும் அது தான் லட்சியம்." என்று அவர் கூறினார். தனது குடும்பத்தைப் பற்றிப் பேசுகையில், ரின்கு தனது பெற்றோரும், மற்றவர்களும் தனது போராட்டத்தைப் பார்த்ததாகவும், இந்திய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை பெற்றபோது, தன்னை விட அவர்களே அதிகம் மகிழ்ச்சி அடைந்ததாக கூறினார். தான் முதன்முதலில் இந்திய ஜெர்சியை அணியும் தருணத்தை எனது குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு அர்ப்பணிப்பேன் என்று தெரிவித்தார்.