ரோகித் ஷர்மாவின் கேப்டன்சி குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து
ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கி 15 போட்டிகள் நிறைவடைந்திருக்கும் நிலையில், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது இந்தியா. இந்தத் தொடரில் தாங்கள் விளையாடிய மூன்று போட்டிகளிலும் அபாரமாக வெற்றி கண்டு சிறப்பான நெட் ரன் ரேட்டையும் கொண்டு முதலிடத்தைப் பிடித்திருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி. இந்த உலக கோப்பைத் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே, கோப்பையை வெல்லக்கூடிய சாத்தியமுள்ள அணிகளின் பட்டியலில் இந்தியாவும் இருந்தது. அதற்கு காரணம் ஹோம் கிரவுண்டு அட்வான்டேஜ் தான். ஒரு பேட்ஸ்மேனாக முதல் போட்டியில் சரிவைச் சந்தித்தாலும், கேப்டனாக மூன்று போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா.
ரோகித் ஷர்மா குறித்து ரிக்கி பாண்டிங் கருத்து:
இந்தியாவின் சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்து ரோகித் ஷர்மா குறித்து கருத்து தெரிவித்திருக்கிறது இருமுறை உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங். அவர், "ரோகித் ஷர்மா நிதானமானவர். சொந்த நாட்டில் உலக கோப்பை தொடரை எதிர்கொள்ளும் போது நிறையவே அழுத்தம் இருக்கும். அந்த அழுத்தத்தை ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி சிறப்பாகவே கையாண்டிருக்கறது. களத்திலும் சரி, களத்திற்கு வெளியேயும் சரி நிதானமான கேப்டனாக இருக்கிறார் ரோகித் ஷர்மா. இந்த அணுகுமுறையே சொந்த நாட்டில் விராட் கோலியை விட சிறந்த கேப்டனாக ரோகித் ஷர்மாவை மாற்றுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.