ரீவைண்ட் 2023 : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முக்கிய தருணங்கள்
2023 ஜூன் 11 அன்று, இந்தியாவின் முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வதற்கான நம்பிக்கைகள் உச்சத்தில் இருந்தன. போட்டியின் கடைசி நாளான அன்று இந்தியாவுக்கு 280 ரன்கள் வெற்றி இலக்காக இருந்த நிலையில், மூன்று விக்கெட்டுகளை இழந்தாலும், இரண்டு சிறந்த பேட்டர்களான விராட் கோலி மற்றும் அஜிங்க்யா ரஹானே ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களத்தில் இருந்தனர். ஆனால், ஐந்தாவது நாளில் வெறும் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், கடைசி நாளில் 80 ரன்களை மட்டுமே எடுத்து மீதமுள்ள 7 விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது. 2023ஆம் ஆண்டு முடியும் இந்த தருணத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி குறித்த சில முக்கிய தருணங்களை இதில் பார்க்கலாம்.
முதல் முறையாக டெஸ்ட் சாம்பியன் பட்டம் வென்றது ஆஸ்திரேலியா
2023 ஜூன் 7 முதல் 11 வரை நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதல் இன்னிங்சில் 469 ரன்கள் குவித்தது. இந்திய கிரிக்கெட் அணி முதல் இன்னிங்சில் 296 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 270 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்த நிலையில், இந்தியாவுக்கு 444 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், இந்தியா 234 ரன்களுக்கு சுருண்டு தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் ஆஸ்திரேலியா முதல் முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. இந்தியா இரண்டாவது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறியும் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இழந்தது.
ஆட்ட நாயகன் விருது வென்ற டிராவிஸ் ஹெட்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தனது முதல் பட்டத்தை வெல்வதில் முக்கிய காரணங்களில் ஒன்றாக டிராவிஸ் ஹெட் அடித்த ஸ்கோர் இருந்தது. டிராவிஸ் ஹெட் இரண்டாவது இன்னிங்சில் 18 ரன்களில் ஆட்டமிழந்தாலும், முதல் இன்னிங்சில் 174 பந்துகளை எதிர்கொண்டு ஒரு சிக்ஸர் மற்றும் 25 பவுண்டரிகளுடன் 163 ரன்களை எடுத்தார். இது அந்த அணி முதல் இன்னிங்சில் இந்தியாவை விட மிகப்பிரிய அளவில் முன்னிலை பெற உதவியது. இதனால் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களித்த டிராவிஸ் ஹெட் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021-25 சுழற்சியின் இறுதிப்போட்டியில் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
ஆஸ்திரேலியாவுக்கு 5000 ரன்கள் மைல்கல்லை எட்டிய விராட் கோலி
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வி அடைந்தாலும், நட்சத்திர வீரர் விராட் கோலி அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் சேர்த்து மொத்தமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5,000 ரன்களை எட்டிய இரண்டாவது வீரர் ஆனார். இதற்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மொத்தமாக 6,707 ரன்கள் எடுத்துள்ளார். இதற்கிடையே, டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2,000 ரன்களை எட்டிய ஐந்தாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றார். இதற்கு முன்னதாக டெண்டுல்கர், ராகுல் டிராவிட், விவிஎஸ் லக்ஷ்மண் மற்றும் செத்தேஸ்வர் புஜாரா மட்டுமே இந்த மைல்கல்லை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் தோல்விக்கு காரணம்
மூத்த கிரிக்கெட் வீரர் அஜிங்க்யா ரஹானே இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டதால் மீண்டும் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். தேர்வு செய்ததற்கு ஏற்ற வகையில் சிறப்பாக செயல்பட்டு, இந்த போட்டியில் அதிக ரன் குவித்த இந்திய வீரராகவும் ஆனார். ஆனால், இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் இரண்டு இன்னிங்ஸ்களிலும் மோசமாக செயல்பட்டு அணிக்கு தோல்வியை பெற்றுக் கொடுத்தனர். மேலும், இந்திய பந்துவீச்சாளர்கள் முதல் இன்னிங்ஸில் டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித்தை அவுட்டாக்க முடியாமல் திணறியதும் தோல்விக்கான மற்றொரு காரணமாக கூறப்படுகிறது.