LOADING...
ஐபிஎல் 2026: 250 ரன்கள் குவித்து சிஎஸ்கேவை சிதறடித்த ஆர்சிபி; ஹாட்ரிக் தோல்வியால் சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி
ஐபிஎல் 2026 தொடரில் சிஎஸ்கே தொடர்ந்து மூன்றாவது போட்டியிலும் தோல்வி

ஐபிஎல் 2026: 250 ரன்கள் குவித்து சிஎஸ்கேவை சிதறடித்த ஆர்சிபி; ஹாட்ரிக் தோல்வியால் சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி

எழுதியவர் Sekar Chinnappan
Apr 06, 2026
07:06 am

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் 2026இன் 11வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த சென்னை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. ஆர்சிபி தொடக்க வீரர்கள் விராட் கோலி மற்றும் பிலிப் சால்ட் நிதானமாகத் தொடங்கினாலும், பின்னர் ரன் வேகம் அதிகரித்தது. கோலி 28 ரன்களில் ஆட்டமிழக்க, பிலிப் சால்ட் 46 ரன்கள் எடுத்து வலுவான அடித்தளம் அமைத்தார். அதனைத் தொடர்ந்து களம் புகுந்த தேவதத் படிங்கல் அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் 50 ரன்கள் விளாசினார். இது ஐபிஎல் தொடரில் அவர் அடிக்கும் 13வது அரைசதமாகும்.

டிம் டேவிட் - ரஜத் படிதார் ஜோடி 

டிம் டேவிட் - ரஜத் படிதார் ஜோடியின் அதிரடித் தாண்டவம்

படிங்கல் ஆட்டமிழந்த பிறகு மைதானத்திற்குள் நுழைந்த டிம் டேவிட் மற்றும் கேப்டன் ரஜத் படிதார் ஜோடி சென்னை பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. குறிப்பாக டிம் டேவிட் வெறும் 25 பந்துகளில் 8 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மறுபுறம் ரஜத் படிதார் 19 பந்துகளில் 48 ரன்கள் விளாசினார். இவர்களது 99 ரன்கள் பார்ட்னர்ஷிப் உதவியுடன் ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்கள் குவித்தது. இது இந்த சீசனின் அதிகபட்ச ஸ்கோர் மட்டுமின்றி, ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணிக்கு எதிராக ஒரு அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோராகும். ஆர்சிபி அணி இந்தப் போட்டியில் மொத்தம் 19 சிக்ஸர்களைப் பறக்கவிட்டது.

சிஎஸ்கே போராட்டம்

சென்னை அணியின் போராட்டம்: சர்பராஸ் கானின் அரைசதம்

251 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குத் தொடக்கமே சோகமாக அமைந்தது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதல் ஓவரிலேயே ஆட்டமிழக்க, ஆயுஷ் மத்ரே மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரும் அடுத்தடுத்து வெளியேறினர். 30 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்த சென்னை அணியைச் சர்பராஸ் கான் மற்றும் ஷிவம் துபே ஜோடி மீட்டெடுத்தது. சர்பராஸ் கான் அதிரடியாக விளையாடி வெறும் 24 பந்துகளில் 50 ரன்கள் கடந்தார். ஒரு கட்டத்தில் சென்னை அணி 10 ஓவர்களில் 100 ரன்களைக் கடந்தாலும், சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தது அந்த அணிக்குப் பின்னடைவாக அமைந்தது.

Advertisement

ஆர்சிபி வெற்றி

ஆர்சிபியின் அபார வெற்றி மற்றும் சிஎஸ்கேவின் சரிவு

இறுதி கட்டத்தில் பிரஷாந்த் வீர் (43 ரன்கள்) மற்றும் ஜேமி ஓவர்டன் (37 ரன்கள்) ஜோடி 57 ரன்கள் சேர்த்துப் போராடிய போதிலும், ஆர்சிபியின் துல்லியமான பந்துவீச்சை அவர்களால் மீற முடியவில்லை. புவனேஷ்வர் குமார் மற்றும் சுயஷ் சர்மா ஆகியோர் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி ஆர்சிபியின் வெற்றியை உறுதி செய்தனர். சென்னை அணி 19.4 ஓவர்களில் 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் ஆர்சிபி அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. அதே சமயம், ஆடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ள சென்னை அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

Advertisement