LOADING...
IPL வரலாற்றில் அதிக விலைக்கு விற்கப்பட்ட அணியானது RCB; பிர்லா குழுமம் தலைமையிலான கூட்டமைப்பு வாங்கியது
IPL வரலாற்றில் அதிக விலைக்கு விற்கப்பட்ட அணியானது RCB

IPL வரலாற்றில் அதிக விலைக்கு விற்கப்பட்ட அணியானது RCB; பிர்லா குழுமம் தலைமையிலான கூட்டமைப்பு வாங்கியது

எழுதியவர் Venkatalakshmi V
Mar 24, 2026
09:51 pm

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி சுமார் 1.8 பில்லியன் அமெரிக்க டாலர்(இந்திய மதிப்பில் சுமார் ₹16,896 கோடி) என்ற பிரம்மாண்ட விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்ட அணி என்ற வரலாற்றுச் சாதனையை ஆர்சிபி படைத்துள்ளது. இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனமான ஆதித்யா பிர்லா குழுமம், குமார மங்கலம் பிர்லா தலைமையில் இந்த கூட்டமைப்பை வழிநடத்துகிறது. இவர்களுடன் அமெரிக்க விளையாட்டு முதலீட்டாளர் டேவிட் பிளிட்சர், பிளாக்ஸ்டோன் நிறுவனம் மற்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம் இணைந்து இந்த அதிரடி ஏலத்தை வென்றுள்ளன. இதற்கு முன்பு இந்த அணியை யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம் நிர்வகித்து வந்தது.

வளர்ச்சி

RCB -யின் அசுர வளர்ச்சி

2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்டபோது வெறும் $111.6 மில்லியனுக்கு (சுமார் ₹446 கோடி) வாங்கப்பட்ட ஆர்சிபி, கடந்த 18 ஆண்டுகளில் 16 மடங்கு அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலைதான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி $1.63 பில்லியனுக்கு விற்கப்பட்டு சாதனை படைத்திருந்தது. ஆனால், அடுத்த சில மணி நேரங்களிலேயே ஆர்சிபி அந்தச் சாதனையை முறியடித்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. பிர்லா குடும்பம் முதல்முறையாக ஒரு விளையாட்டு அணியை வாங்கியுள்ள நிலையில், இவர்களுடன் கைகோர்த்துள்ள டேவிட் பிளிட்சர் ஏற்கனவே அமெரிக்காவின் NBA மற்றும் இங்கிலாந்தின் EPL கால்பந்து தொடர்களில் பல அணிகளின் பங்குகளை வைத்திருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாற்றமானது பெங்களூரு அணியின் பிராண்ட் மதிப்பையும், ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் மேலும் அதிகரித்துள்ளது.

Advertisement