₹13,500 கோடிக்கு விற்கப்பட்ட ராஜஸ்தான் ராயல்ஸ்; 100% பங்குகளை வாங்கினார் அமெரிக்கத் தொழிலதிபர்
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சுமார் 1.63 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ₹13,500 கோடி) என்ற பிரம்மாண்ட விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒரு பில்லியன் டாலர் மதிப்பை தாண்டிய முதல் ஐபிஎல் அணி என்ற வரலாற்றுச் சாதனையை அது படைத்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான கல் சோமணி தலைமையிலான கூட்டமைப்பு இந்த அணியை வாங்கியுள்ளது. இவருக்கு பின்னால் உலகப் புகழ்பெற்ற வால்மார்ட் குடும்பத்தைச் சேர்ந்த ராப் வால்டன் மற்றும் NFL தொடரின் டெட்ராய்ட் லயன்ஸ் அணியின் உரிமையாளர்களான ஹாம்ப் குடும்பத்தினர் உள்ளனர்.
முக்கிய விவரங்கள்
RR அணி விற்கப்பட்டதன் விவரங்கள்
இதற்கு முன்பு மனோஜ் படாலே தலைமையிலான 'எமர்ஜிங் மீடியா வென்ச்சர்ஸ்' (Emerging Media Ventures) RR அணியின் பெரும்பான்மைப் பங்குகளை வைத்திருந்தது. 2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்டபோது வெறும் $67 மில்லியனுக்கு (அப்போது மிகக் குறைந்த விலை அணி) வாங்கப்பட்ட ராஜஸ்தான் ராயல்ஸ், இன்று 24 மடங்கு அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் 2026 சீசன் முடிவடைந்தவுடன் முறைப்படி இந்த அணி புதிய உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும். கல் சோமணி ஏற்கனவே கல்வித் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) துறைகளில் உலகளாவிய நிறுவனங்களை நடத்தி வருபவர் என்பதால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் எதிர்காலம் தொழில்நுட்ப ரீதியாகவும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.