அஜித் அகர்கர் வெளியேறிய அடுத்த சில மணி நேரங்களில் ரவீந்திர ஜடேஜா போட்ட ட்வீட்; பின்னணி என்ன?
செய்தி முன்னோட்டம்
இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) முதன்மைத் தேர்வாளர் அஜித் அகர்கரின் பதவிக் காலம் நிறைவடைந்ததாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்த சில மணி நேரங்களில், இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்ட கருத்து கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக சமூக வலைதளங்களில் அவ்வளவாக ஈடுபாடு காட்டாத ரவீந்திர ஜடேஜா, பிசிசிஐ வெளியிட்ட புதிய தேர்வுக்குழு உறுப்பினர் பதவிக்கான விளம்பரப் பதிவின் கீழ் கருத்துப் பதிவிட்டுள்ளார். அதில், "இந்தக் காலியிடத்திற்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறை என்ன?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அகர்கர் விலகிய உடனேயே ஜடேஜா இப்படிப் பதிவிட்டிருப்பது ரசிகர்களிடையே பலத்த விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
பூசல்
அகர்கர் - ஜடேஜா இடையேயான மறைமுகப் பூசல்?
அஜித் அகர்கர் மற்றும் ரவீந்திர ஜடேஜா இடையே நேரடியாக எவ்வித மோதலும் பகிரங்கமாக வெளிப்பட்டதில்லை என்றாலும், இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணிகளில் மூத்த வீரர்களை நீக்கிவிட்டு இளம் வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அகர்கரின் கொள்கை ஜடேஜாவைப் பாதித்தது.
2024 டி20 உலகக்கோப்பையை வென்ற கையோடு ஜடேஜா, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டி20 சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றனர்.
புறக்கணிப்பு
ஒருநாள் தொடர்களில் புறக்கணிப்பு
அகர்கரின் பதவிக் காலத்தில், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்களில் ஜடேஜா அணியில் சேர்க்கப்படாமல் ஒதுக்கி வைக்கப்பட்டார்.
இது குறித்து அப்போது பேசிய ஜடேஜா, "தேர்வு என் கையில் இல்லை. அணி நிர்வாகமும் தேர்வாளர்களும் எடுத்த முடிவுக்கு அவர்களிடம் காரணங்கள் இருக்கும்" எனக் கூறித் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில், அகர்கரின் விலகலைத் தொடர்ந்து ஜடேஜா பதிவிட்டுள்ள இந்த ட்வீட், இருவருக்கும் இடையே சுமூகமான உறவு இல்லை என்பதையே உணர்த்துவதாகக் கருதப்படுகிறது.