
டெஸ்ட் போட்டிகளில் அதிக ஆட்டநாயகன் விருதுகள்; விராட் கோலி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வினை முந்தி ஜடேஜா சாதனை
செய்தி முன்னோட்டம்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிராக அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், நட்சத்திர ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், ஒரு தனிப்பட்ட சாதனையைப் படைத்துள்ளார். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் அவர் காட்டிய அசாத்திய ஆட்டத்திற்காக, ரவீந்திர ஜடேஜாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இது டெஸ்ட் வடிவத்தில் அவர் பெறும் 11வது விருதாகும். இதன் மூலம், இந்திய ஜாம்பவான்களான விராட் கோலி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய இருவரையும் அவர் முந்தியுள்ளார். இவர்கள் இருவரும் தலா 10 ஆட்டநாயகன் விருதுகளை வைத்துள்ளனர். தற்போது முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் டிராவிட் (11 விருதுகள்) சாதனையை ஜடேஜா சமன் செய்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர்
முதலிடத்தில் சச்சின் டெண்டுல்கர்
இந்தியர்கள் பட்டியலில் அதிக ஆட்டநாயகன் விருது வென்ற சச்சின் டெண்டுல்கருக்குப் (14) பின்னால் இரண்டாவது இடத்தில் ரவீந்திர ஜடேஜா உள்ளார். இந்தத் தொடருக்குத் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள 36 வயதான ரவீந்திர ஜடேஜா, நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இந்தியாவின் ஒரே இன்னிங்ஸில் அவர் 104 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதைத் தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸின் இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாகப் பந்துவீசி நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்த அமோக வெற்றியின் மூலம், இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது டெஸ்ட் அக்டோபர் 10இல் தொடங்க உள்ளது.