
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்விக்கு பிறகு வெளியிட்ட ட்வீட்டின் பின்னணி : மனம் திறந்த அஸ்வின் ரவிச்சந்திரன்
செய்தி முன்னோட்டம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 இறுதிப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியைத் தழுவியது. இதையடுத்து இந்திய ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் இந்திய அணியின் செயல்பாடு குறித்து கடுமையாக விமர்சித்து வந்தனர்.
குறிப்பாக விளையாடும் லெவன் அணியில் இருந்து அஸ்வின் ரவிச்சந்திரன் நீக்கப்பட்டது அதிக பேசுபொருளாக இருந்தது.
அஸ்வின் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சி முழுவதும் இந்தியாவிற்காக சிறப்பாக செயல்பட்டு, அணி இறுதிப் போட்டிக்கு வருவதற்கு முக்கியமானவராக இருந்தார்.
எனினும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் விளையாடவில்லை. இது கேள்விகளை எழுப்பியது.
அதே சமயம் தோல்விக்குப் பிறகு, அஸ்வினே ட்விட்டரில் ஆஸ்திரேலியாவை வாழ்த்தி பதிவிட்டதோடு, இழப்பு இருந்தபோதிலும் உறுதியான ஆதரவிற்காக ரசிகர்கள் மற்றும் அணியின் துணை ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
ashwin speaks about father
ட்வீட் வெளியிட்டது குறித்து பேசிய அஸ்வின் ரவிச்சந்திரன்
போட்டியின் முடிவில் ட்வீட் வெளியிட்டது குறித்து பேசிய அஸ்வின் ரவிச்சந்திரன், "ட்வீட் போட்டதற்கு காரணம், நான் ஒரு விஷயத்தை உணர்ந்து கொண்டேன்.
இந்த விஷயத்தை மூடினால் தான் அடுத்த விசயத்திற்கு முன்னேற முடியும். சுற்றித் திரிவதற்கு நேரமில்லை. நான் இப்போது வாழ்க்கையை நன்றாகப் புரிந்துகொண்டேன்." எனத் தெரிவித்தார்.
எனினும் இந்த விவகாரம் தனது குடும்பத்தில், குறிப்பாக தந்தையின் மன ஆரோக்கியத்தை கடுமையாக பாதித்ததாக தெரிவித்தார்.
தனது தந்தைக்கு இதய நோய் பிரச்சினை இருப்பதாக தெரிவித்த அவர், கிரிக்கெட்டில் ஒவ்வொரு போட்டியிலும் தனக்கு ஏதாவது நடந்தால் தந்தை அழைத்து பேசுவார் என்றும், இது அவரை மனதளவில் மிகவும் பாதித்துள்ளதாகவும் கூறினார்.