'இந்திய அணி நிர்வாகத்திற்கு சரியான பாடம் புகட்டிய அஸ்வின்' : முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய கிரிக்கெட் அணி ஆதிக்கம் செலுத்துவதற்கு முக்கிய காரணமாக, அஸ்வின் ரவிச்சந்திரன் எடுத்த ஐந்து விக்கெட்டுகள் இருந்தன. முதல் நாளில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான தேஜ்நரைன் சந்தர்பால் மற்றும் கிரேக் பிராத்வைட், அல்ஸாரி ஜோசப், அலிக் அதானாஸ் மற்றும் ஜோமெல் வாரிக்கனின் விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த ஐந்து விக்கெட்டுகள் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகள் எனும் மைல்கல்லை எட்டிய மூன்றாவது இந்தியர் என்ற சாதனையை அஸ்வின் படைத்தார். இந்நிலையில், முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், தன்னை சேர்க்காமல் அணி நிர்வாகம் தவறு செய்ததை உணர்த்தியுள்ளதாக தெரிவித்தார்.
அஸ்வினின் அபார ஆட்டம் குறித்து ஆகாஷ் சோப்ரா பேச்சு
தனது யூடியூப் சேனலில் அஸ்வினின் அபார ஆட்டம் குறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா, "வெஸ்ட் இண்டீஸ் அணி பேட் செய்வதைத் தேர்ந்தெடுத்து 150 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அஸ்வின் ஐந்து விக்கெட்டுகளை எடுத்தார். இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நாம் தவறிழைத்தோம் என்பதை அவர் உணர்த்தியுள்ளார். டொமினிகாவில் இருக்கும் பிட்ச்கள் அல்லது வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்பே, அஸ்வின் தொடர் நாயகனாக இருப்பார் என்று நான் கணித்திருந்தேன். இப்படியே தொடர்ந்தால், நிச்சயம் தொடர் நாயகன் ஆகி விடுவார்." என்று கூறினார். மேலும், அஸ்வினின் துல்லியமான பந்துவீச்சுதான், அவர் சிறப்பாக செயல்பட்டதற்கு முக்கிய காரணம் எனவும் தெரிவித்தார்.