டி20 கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்தியர் : அஸ்வின் சாதனை
அஸ்வின் ரவிச்சந்திரன் 300 டி20 விக்கெட்டுகளை பூர்த்தி செய்து இந்த சாதனையை நிகழ்த்திய இரண்டாவது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார். ஐபிஎல் 2023 சீசனின் 42வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இந்த சாதனையை அவர் செய்தார். இந்த சாதனைக்கு இரண்டு விக்கெட்டுகள் தேவைப்பட்ட நிலையில், வான்கடே மைதானத்தில் களமிறங்கிய அஸ்வின், இஷான் மற்றும் கேமரூன் கிரீனின் விக்கெட்டுகளை வீழ்த்தி மைல்கல்லை எட்டினார். இதற்கிடையே ஐபிஎல் 2023 தொடரில் சிறப்பாக பந்துவீசி வரும் அஸ்வின் இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை கைப்பற்றி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிக விக்கெட் எடுத்தவராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
டி20 கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்கள்
அஸ்வினுக்கு முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின்போது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர் யுஸ்வேந்திர சாஹல் டி20 கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் எனும் மைல்கல்லை எட்டிய முதல் வீரர் ஆனார். இந்நிலையில் தற்போது இரண்டாவது இந்தியராக அஸ்வின் இந்த சாதனையை செய்துள்ளதோடு, சர்வதேச அளவில் இந்த மைல்கல்லை எட்டிய 17வது பந்து வீச்சாளர் மற்றும் ஒன்பதாவது சுழற்பந்து வீச்சாளர் ஆனார். டுவைன் பிராவோ 615 விக்கெட்டுகளுடன் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இதற்கிடையே சர்வதேச டி20 போட்டிகளில் 65 போட்டிகளில் 72 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின், இந்தியாவுக்காக அதிக விக்கெட் வீழ்த்திய மூன்றாவது வீரராக உள்ளது குறிப்பிடத்தக்கது.