உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள்; ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய சாதனை
செய்தி முன்னோட்டம்
புனேவில் இன்று (அக்டோபர் 24) தொடங்கியுள்ள நியூசிலாந்துக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய சாதனை படைத்துள்ளார்.
இந்த போட்டி தொடங்கும் முன்னதாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக விக்கெட் எடுத்தவராக உள்ள ஆஸ்திரேலியாவின் நாதன் லியோனின் சாதனையை முறிக்க ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு இரண்டு விக்கெட்டுகள் தேவையாக இருந்தது.
இந்நிலையில், டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கிய நிலையில், முதல் நாள் ஆட்டத்தின் முதல் அமர்விலேயே அஸ்வின் டாம் லாதமை எல்பிடபிள்யூ மூலம் வெளியேற்றினார்.
மேலும், உணவு இடைவேளைக்கு முன்னர் வில் யங்கின் விக்கெட்டையும் வீழ்த்தி, நாதன் லியோனின் சாதனையை முறியடித்துள்ளார்.
அதிக விக்கெட்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக விக்கெட் வீழ்த்திய டாப் 5 வீரர்கள்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஆஸ்திரேலியாவின் நாதன் லியோன் 78 இன்னிங்ஸ்களில் 187 விக்கெட் எடுத்த நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வின் 74 இன்னிங்ஸ்களிலேயே 188 விக்கெட்டுகளை எடுத்து இந்த சாதனையை படைத்துள்ளார்.
இதற்கிடையே, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் 175 விக்கெட்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
அவரைத் தொடர்ந்து 147 விக்கெட்களுடன் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் மற்றும் 134 விக்கெட்களுடன் இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் முறையே நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களில் உள்ளனர்.
இந்தியா vs நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியைப் பொறுத்தவரை, முதல் நாளில் உணவு இடைவேளை நேரத்தில் நியூசிலாந்து 2 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்களுடன் களத்தில் உள்ளது.