ஐபிஎல் 2026: குஜராத் அணிக்கு எதிராக 4 விக்கெட்டுகள்! டி20 கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளைக் கடந்து ரவி பிஷ்னோய் புதிய வரலாறு
செய்தி முன்னோட்டம்
அகமதாபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026ன் 9வது லீக் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் ஒரு பிரம்மாண்டமான சாதனையைப் படைத்துள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக வெறும் 41 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளைச் சாய்த்த பிஷ்னோய், டி20 கிரிக்கெட் வரலாற்றில் 200 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லைக் கடந்து அசத்தியுள்ளார். இந்தப் போட்டியில் இம்பாக்ட் பிளேயராக இரண்டாம் பாதியில் களம் புகுந்த அவர், தனது மாயாஜாலப் பந்துவீச்சால் ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் சுழற்பந்து வீச்சாளர் என்ற வரலாற்றுப் பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
மாயாஜாலப் பந்துவீச்சு
முக்கிய விக்கெட்டுகளைச் சரித்த பிஷ்னோய்
பிஷ்னோய் தனது பந்துவீச்சைத் தொடங்கிய தனது முதல் ஓவரிலேயே, நிலைத்து நின்று ஆடிக்கொண்டிருந்த சாய் சுதர்சனின் விக்கெட்டை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்தார். பெரிய ஷாட் ஆட முயன்ற சாய் சுதர்சன், துஷார் தேஷ்பாண்டேவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது ஓவரில் கிளென் பிலிப்ஸ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரையும் அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்து குஜராத் அணியின் பேட்டிங் வரிசையைச் சரித்தார். இறுதியாக, அதிரடி வீரர் ராகுல் திவேதியாவை விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெலிடம் கேட்ச் கொடுக்கச் செய்து தனது நான்காவது விக்கெட்டைப் பதிவு செய்தார். இந்தத் துல்லியமான பந்துவீச்சு ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு வித்திட்டது.
புதிய உச்சத்தில் பிஷ்னோய்
புள்ளிவிபரங்கள் மற்றும் ஆட்டநாயகன் விருது
ஐபிஎல் தொடரில் தனது 79வது போட்டியில் விளையாடிய பிஷ்னோய், இதுவரை மொத்தம் 77 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். குறிப்பாக, ஐபிஎல் அரங்கில் அவர் எடுத்த முதல் 4 விக்கெட் சாதனை இதுவாகும். ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் இதுவரை 202 டிக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவர், தனது 4வது 'ஃபோர்-ஃபெர்' சாதனையைப் பதிவு செய்துள்ளார். இதற்கு முன்பு குஜராத் அணிக்கு எதிராக லக்னோ அணியின் குருணல் பாண்டியா 3 விக்கெட்டுகளை எடுத்ததே சிறந்த சாதனையாக இருந்தது. அதனை இன்று பிஷ்னோய் முறியடித்துள்ளார். இந்த அசாத்தியமான பந்துவீச்சுக்காக அவருக்கு 'ஆட்டநாயகன்' விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
வெற்றி
ராஜஸ்தான் ராயல்ஸின் வெற்றிப் பயணமும் பிஷ்னோயின் பங்களிப்பும்
பிஷ்னோயின் இந்த மிரட்டலான பந்துவீச்சு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறப் பெரிதும் உதவியுள்ளது. ஒரு இம்பாக்ட் பிளேயராகக் களமிறங்கி ஆட்டத்தின் இக்கட்டான சூழலில் விக்கெட்டுகளை வீழ்த்துவது என்பது கடினமான காரியம், அதை பிஷ்னோய் மிக லாவகமாகச் செய்து முடித்துள்ளார். அவரது இந்த ஃபார்ம் வரும் போட்டிகளிலும் தொடரும் பட்சத்தில், ராஜஸ்தான் அணி இந்த சீசனில் ஒரு வலுவான போட்டியாளராகத் திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.