மும்பையை 'லாக்' செய்த ராஜஸ்தான்! கௌகாத்தியில் ஹாட்ரிக் வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம்!
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2026 தொடரில் கௌகாத்தியில் நடைபெற்ற விறுவிறுப்பான லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் (MI) அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் நடப்புத் தொடரில் ராஜஸ்தான் அணி தனது மூன்றாவது தொடர் வெற்றியைப் (Hat-trick) பதிவு செய்து, புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. மழையினால் ஆட்டம் பாதிக்கப்பட்டதால், நடுவர்கள் ஆட்டத்தைத் தலா 11 ஓவர்களாகக் குறைத்தனர். டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா, ஆடுகளம் ஈரமாக இருந்ததைப் பயன்படுத்தி முதலில் பந்துவீசத் தீர்மானித்தார். ஆனால், ராஜஸ்தான் பேட்டர்கள் அந்த முடிவைத் தவிடுபொடியாக்கினர்.
இமாலய இலக்கு
மிரட்டல் பேட்டிங்
முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணிக்குத் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி மின்னல் வேகத் தொடக்கம் கொடுத்தார். வெறும் 14 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 1 பவுண்டரியுடன் 39 ரன்கள் குவித்து மும்பை பந்துவீச்சை நிலைகுலையச் செய்தார். மற்றொரு தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால், தான் ஏன் ஒரு நட்சத்திர வீரர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்தார். 32 பந்துகளை எதிர்கொண்ட ஜெய்ஸ்வால், 10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 77 ரன்கள்* குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 11 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்டியது.
பின்வரிசை போராட்டம்
சரிந்த மும்பை கோட்டை
151 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்குத் தொடக்கம் முதலே விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்தன. சரிவில் இருந்த அணியை மீட்க முயன்ற கேப்டன் ஹர்திக் பாண்டியா 9 ரன்களிலும், திலக் வர்மா 14 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். 5 ஓவர்கள் முடிவிலேயே 46 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து மும்பை அணி தத்தளித்தது. ரதர்ஃபோர்டு மற்றும் நமன் தீர் (25) ஆகியோர் அதிரடியாக ஆடி ரன்களை உயர்த்த முயன்றனர். ரதர்ஃபோர்டு சிக்ஸர்களைப் பறக்கவிட்டாலும், துஷார் தேஷ்பாண்டே மற்றும் நண்ட்ரே பர்கர் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சால் அவர்களும் வெளியேறினர். நிர்ணயிக்கப்பட்ட 11 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ராஜஸ்தானின் ஹாட்ரிக் சாதனை
ராஜஸ்தானின் ஆல்-ரவுண்ட் ஆதிக்கம்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்டிங் மட்டுமின்றி, பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங்கும் மிக வலுவாக இருந்தது. ரவி பிஷ்னோய், நண்ட்ரே பர்கர் மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் மிகச்சிறப்பாகப் பந்துவீசி மும்பை அணியை முடக்கினர். ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்ட ஜெய்ஸ்வாலின் 77 ரன்கள் மற்றும் பந்துவீச்சாளர்களின் துல்லியம் ராஜஸ்தான் அணிக்கு இந்த மெகா வெற்றியைத் தேடித்தந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இது தொடர்ச்சியான இரண்டாவது தோல்வியாகும்.