INDvsBAN 2வது டெஸ்ட்: அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்தார் ரவிச்சந்திரன் அஸ்வின்
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆசியாவிலேயே அதிக விக்கெட் வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) தொடங்கியுள்ள வங்கதேசத்திற்க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் அஸ்வின் இந்த சாதனையை படைத்தார். அவர் வங்கதேச கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோவை வெளியேற்றியதன் மூலம் ஆசியாவில் 420வது டெஸ்ட் விக்கெட்டை எடுத்தார். இதன் மூலம் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த அனில் கும்ப்ளேவை பின்னுக்குத் தள்ளி, இரண்டாவது இடம் பிடித்தார். இந்த பட்டியலில் இலங்கையின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் மட்டுமே ஆசியாவில் 612 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
இந்தியா vs வங்கதேசம் 2வது டெஸ்ட் புள்ளிவிபரம்
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி வெள்ளிக்கிழமை கான்பூரின் கிரீன் பார்க் மைதானத்தில் நடந்து வருகிறது. முன்னதாக, மழை காரணமாக போட்டி ஒரு மணிநேரம் தாமதமாக தொடங்கிய நிலையில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இடையே மழை காரணமாக போட்டி சிறிது நேரம் தடைபட்ட நிலையில், தற்போது போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் போட்டி நிறுத்தப்பட்டுள்ளது. முதல் நாளில் 35 ஓவர்கள் மட்டுமே இதுவரை வீசப்பட்டுள்ள நிலையில், வங்கதேசம் 3 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்களை எடுத்துள்ளது.