
BWF உலக சாம்பியன்ஷிப்பின் காலிறுதியில் தோல்வி; சாதனை படைக்கும் வாய்ப்பை இழந்தார் பிவி சிந்து
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் பேட்மிண்டன் நட்சத்திரம் பிவி சிந்து, BWF உலக சாம்பியன்ஷிப்பின் காலிறுதிப் போட்டியில் இந்தோனேசியாவின் புத்ரி குசுமா வர்தானியிடம் தோல்வியடைந்தார். வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) அன்று நடந்த இந்தப் போட்டியில், வர்தானி 21-14, 13-21, 21-16 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். பிவி சிந்து இந்தப் போட்டியில் தோல்வியடைவதற்கு முன், ஒரு கேமைகூட இழக்காமல் சிறப்பாக ஆடி வந்தார். கடந்த சுற்றில் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான வாங் ஜி யியை பிவி சிந்து வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதிக பதக்கங்கள்
உலக சாம்பியன்ஷிப்பில் அதிக பதக்கங்கள்
இந்தப் போட்டியில் பிவி சிந்து வென்றிருந்தால், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தனது ஆறாவது பதக்கத்தைப் பெற்று, சீன வீராங்கனை ஜாங் நிங்கின் சாதனையை முறியடித்து வரலாறு படைத்திருப்பார். தற்போது சிந்து ஐந்து பதக்கங்களுடன் உள்ளார். உலகத் தரவரிசையில் 15 வது இடத்தில் உள்ள சிந்து, முதல் கேமில் மெதுவாகத் தொடங்கி அதை இழந்தார். ஆனால், இரண்டாவது கேமில் 21-13 என்ற கணக்கில் ஆதிக்கம் செலுத்தி, போட்டியை சமன் செய்தார். இருப்பினும், மூன்றாவது மற்றும் தீர்மானிக்கும் கேமில் அவரால் தனது வேகத்தைத் தக்கவைக்க முடியவில்லை. வர்தானியின் நிலையான ஆட்டம் மற்றும் தொடர்ச்சியாக நான்கு புள்ளிகள் எடுத்தது, அவரது வெற்றிக்கு வழி வகுத்தது.