ஐபிஎல் வரலாற்றில் 2வது முறை: வெறும் 11 பந்துகளில் மிரட்டிய பிரியான்ஷ் ஆர்யாவுக்கு ஆட்டநாயகன் விருது; இதற்கு முன்னர் யார்?
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2026 தொடரின் ஏழாவது போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயித்த 210 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கிப் பயணித்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு, 24 வயதான இடதுகை ஆட்டக்காரர் பிரியான்ஷ் ஆர்யா அதிரடித் தொடக்கம் கொடுத்தார். வெறும் 11 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர், 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 39 ரன்கள் குவித்து ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். இவரது அதிரடியால் பஞ்சாப் அணி பவர்பிளே ஓவர்களிலேயே 60 ரன்களைக் கடந்தது. இந்தத் தாக்கத்தை ஏற்படுத்திய இன்னிங்ஸிற்காக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
அபூர்வ சாதனை
கிளென் பிலிப்ஸ் வரிசையில் ஆர்யா
பிரியான்ஷ் ஆர்யா பெற்றுள்ள இந்த ஆட்டநாயகன் விருது ஐபிஎல் வரலாற்றில் ஒரு மிக அரிதான சாதனையாகும். ஐபிஎல் தொடரில் ஒரு வீரர் பந்துவீசாமலும், எவ்வித பீல்டிங் ஆட்டமிழப்புகளிலும் ஈடுபடாமலும், பேட்டிங்கில் 11 அல்லது அதற்கும் குறைவான பந்துகளை எதிர்கொண்டு ஆட்டநாயகன் விருது பெறுவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன் 2023இல் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் கிளென் பிலிப்ஸ் வெறும் 7 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து இதே போன்ற சாதனையைப் படைத்திருந்தார்.
ஆர்யா பேட்டி
சிறுவயது முதல் இதுதான் என் ஸ்டைல்
வெற்றிக்குப் பிறகு பேசிய பிரியான்ஷ் ஆர்யா, "சிறுவயது முதலே நான் இப்படித்தான் விளையாடி வருகிறேன். அணியின் வெற்றிக்குத் தேவைப்படும்போது ரிஸ்க் எடுக்கத் தயங்கமாட்டேன். முதல் பந்திலேயே என்னால் சிக்ஸர் அடிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு. இதற்காக ஒரு நாளைக்கு தலா ஒன்றரை மணி நேரம் வீதம் இரண்டு வேளைகளில் தீவிர பேட்டிங் பயிற்சியில் ஈடுபடுகிறேன்" என்று தனது வெற்றி ரகசியத்தைப் பகிர்ந்துகொண்டார். டெல்லியில் உள்ள ஆசிரியர் குடும்பத்தைச் சேர்ந்தவரான ஆர்யா, தனது சகோதரி உட்படப் பலரும் ஆசிரியராக இருப்பதால் தானும் ஆசிரியராக ஆசைப்பட்டதாகவும், ஆனால் இப்போது அதற்கு வாய்ப்பில்லை என்றும் ஜாலியாகத் தெரிவித்தார்.
ஆரஞ்சு கோப்பை
ஆரஞ்சு கேப்பைத் தக்கவைத்த கூப்பர் கோனொலி
இந்தப் போட்டியில் பஞ்சாப் அணியின் மற்றொரு இளம் வீரரான கூப்பர் கோனொலி 22 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இதன் மூலம் இந்த சீசனில் மொத்தம் 108 ரன்கள் குவித்து அதிக ரன்கள் எடுத்த வீரர்களுக்கான ஆரஞ்சு கேப்பை தக்கவைத்துள்ளார். "தொடரின் ஆரம்பத்திலேயே சிறப்பாகச் செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இது ஒரு நீண்ட தொடர், எஞ்சியுள்ள 12 போட்டிகளிலும் இதே போன்ற பங்களிப்பை வழங்க முயற்சிப்பேன்" என்று கோனொலி கூறினார்.