இங்கிலாந்து ஒருநாள் கோப்பை போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர்; ப்ரித்வி ஷா சாதனை
ப்ரித்வி ஷா இங்கிலாந்தில் நடந்து வரும் கவுண்டி கிரிக்கெட் அணிகளுக்கான ஒருநாள் கோப்பை போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனை படைத்துள்ளார். புதன்கிழமையன்று (ஆகஸ்ட் 9) நடந்த சாமர்செட்டுக்கு எதிரான போட்டியில் நார்தாம்ப்டன்ஷையர் அணிக்காக விளையாடிய ப்ரித்வி ஷா 153 பந்துகளில் 244 ரன்கள் எடுத்தார். முதல் 81 பந்துகளில் 100 ரன்களையும், அடுத்த 48 பந்துகளில் 200 ரன்களையும் எட்டிய ப்ரித்வி ஷா, இதன் மூலம் லிஸ்ட்-ஏ கிரிக்கெட்டில் தனது இரண்டாவது இரட்டை சதத்தையும் பூர்த்தி செய்தார். முன்னதாக, பிப்ரவரி 2021 இல் விஜய் ஹசாரே டிராபியில் 227 ரன்களை எடுத்து தனது முதல் லிஸ்ட் ஏ இரட்டை சதத்தை அடித்தார்.
இந்திய கிரிக்கெட்டில் ப்ரித்வி ஷா செயல்திறன்
2018 இல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் சதத்துடன் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை இந்திய கிரிக்கெட் அணிக்காக தொடங்கிய ப்ரித்வி ஷா, அணியின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவராக இருந்தார். அவர் கடைசியாக ஜூலை 2021 இல் இலங்கை சுற்றுப்பயணத்தில் இந்தியாவுக்காக விளையாடினார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் நியூசிலாந்திற்கு எதிராக உள்நாட்டில் நடந்த டி20 அணியின் ஒரு பகுதியாக இருந்தார். ஆனால் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் அவர் சேர்க்கப்படவில்லை. மேலும், சமீப காலங்களில் களத்திற்கு வெளியே அடிக்கடி சர்ச்சையில் சிக்கியதாலும், அணியில் அவரை தேர்வு செய்ய தேர்வுக்குழு உறுப்பினர்கள் தயக்கம் காட்டி வருவதாகவும், அணியில் அவரை எதிர்காலத்தில் சேர்ப்பதற்கான வாய்ப்பு குறைவுதான் என்றும் கூறப்படுகிறது.