Loading...
லண்டனில் தெரு கிரிக்கெட் ஆடிய இளவரசர் வில்லியம்: கங்குலி பந்தில் சிக்ஸர் விளாசி அசத்தல்
லண்டனில் தெரு கிரிக்கெட் விளையாடிய இளவரசர் வில்லியம்

லண்டனில் தெரு கிரிக்கெட் ஆடிய இளவரசர் வில்லியம்: கங்குலி பந்தில் சிக்ஸர் விளாசி அசத்தல்

எழுதியவர் Vasuki
Oct 14, 2026
03:37 pm

செய்தி முன்னோட்டம்

லண்டனில் உள்ள உலகப் புகழ்பெற்ற பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வெளியே சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவான்களுடன் பிரிட்டன் இளவரசர் வில்லியம் கலகலப்பாகத் தெரு கிரிக்கெட் விளையாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, வெஸ்ட் இண்டீஸ் சாதனையாளர் பிரையன் லாரா, இங்கிலாந்து நட்சத்திரங்கள் ஜோ ரூட், ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் இந்திய வீரர் அஜிங்க்யா ரஹானே ஆகியோருடன் இணைந்து விளையாடிய இளவரசர் வில்லியம், கங்குலி வீசிய பந்தில் சிக்ஸர் விளாசி அனைவரையும் திகைக்க வைத்தார். அடுத்த மாதம் மும்பையில் நடைபெறவுள்ள 'எர்த்ஷாட் பரிசு' விருது வழங்கும் விழாவை முன்னிட்டும், பிரிட்டன் - இந்தியா இடையிலான உறவைக் கொண்டாடும் வகையிலும் இந்தச் சிறப்பு கிரிக்கெட் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பாராட்டு

சிறந்த பேட்டர் இளவரசர் வில்லியம்

அருகிலுள்ள செயின்ட் ஜேம்ஸ் அரண்மனை வாயிலில் இருந்து வெளியே வந்த இளவரசர் வில்லியம், வீரர்களுக்குக் கைகுலுக்கி வரவேற்று பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் ஈடுபட்டார்.

அவரது ஆட்டத்தைப் பாராட்டிய ஜோ ரூட், "பக்கிங்ஹாம் அரண்மனையின் பின்னணியில் கிரிக்கெட் ஆடுவதே ஒரு தனித்துவமான அழகு. வில்லியம் பந்துவீச்சை விட பேட்டிங்கை மிக நேர்த்தியாகச் செய்கிறார். அவரிடம் நல்ல ஷாட்கள் உள்ளன" என்றார்.

அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா கூறுகையில், "வில்லியம் கால்பந்து ரசிகராக இருந்தாலும், தனது பேட்டிங் திறமையைக் குறைத்து மதிப்பிடுகிறார்".

"எனது சிறந்த 11 பேர் கொண்ட அணியில் 6 அல்லது 7-வது வரிசை பேட்டராக நிச்சயமாக அவரை களமிறக்குவேன்" என நகைச்சுவையுடன் பாராட்டினார்.

நெகிழ்ச்சி

இந்தியா அவரை அன்புடன் வரவேற்கும் - கங்குலி

இந்தியாவின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பேசுகையில், "இளவரசர் வில்லியம் அனைவரிடமும் மிகவும் எளிமையாகவும், புன்னகையுடனும் பழகக்கூடிய மிகச் சிறந்த மனிதர்".

"அடுத்த மாதம் விருது விழாவுக்காக மும்பை வரும் அவரை இந்திய மக்கள் மிகுந்த அன்போடும் விருந்தோம்பலோடும் வரவேற்பார்கள்" என்று தெரிவித்தார்.

கடந்த 2020-ஆம் ஆண்டு இளவரசர் வில்லியமால் தொடங்கப்பட்ட எர்த்ஷாட் திட்டமானது, பூமியின் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்திற்குத் தீர்வு காணும் 5 சிறந்த கண்டுபிடிப்புகளுக்குத் தலா 10 லட்சம் பவுண்டுகள் (சுமார் ரூ.10 கோடிக்கு மேல்) வழங்கி ஊக்குவித்து வருகிறது.

இவ்வாண்டு 5 பிரிவுகளின் கீழ் 15 இறுதிப் போட்டியாளர்கள் போட்டியிடும் நிலையில், இந்த விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

ADVERTISEMENT