LOADING...
ஆட்டநாயகன் பிரசித் கிருஷ்ணா! லக்னோ ஏகானா மைதானத்தில் 4 விக்கெட் வேட்டை; குஜராத் டைட்டன்ஸ் மிரட்டல் வெற்றி
லக்னோவைத் திணறடித்த பிரசித் கிருஷ்ணாவுக்கு 'ஆட்டநாயகன்' விருது

ஆட்டநாயகன் பிரசித் கிருஷ்ணா! லக்னோ ஏகானா மைதானத்தில் 4 விக்கெட் வேட்டை; குஜராத் டைட்டன்ஸ் மிரட்டல் வெற்றி

எழுதியவர் Sekar Chinnappan
Apr 12, 2026
07:52 pm

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் 2026 தொடரின் 19வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணிக்கு எதிராகக் குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) வீரர் பிரசித் கிருஷ்ணா அசாத்தியமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். லக்னோவின் ஏகானா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், வெறும் 28 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய பிரசித் கிருஷ்ணா, போட்டியின் ஆட்டநாயகன் விருதினை வென்று அசத்தினார். இவரது இந்த அபாரமான பந்துவீச்சு லக்னோ அணியைத் தனது சொந்த மண்ணிலேயே 164 ரன்களுக்குள் சுருட்ட பெரிதும் உதவியது.

முக்கிய விக்கெட்டுகள்

முக்கிய விக்கெட்டுகளைத் தூக்கி லக்னோவை சரித்த பிரசித்

பேட்டிங்கில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 69/2 என்ற நிலையில் நிதானமாக ஆடிக்கொண்டிருந்த போதுதான் பிரசித் கிருஷ்ணாவின் ஆட்டம் தொடங்கியது. அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த தொடக்க வீரர் ஐடன் மார்க்ரமை (30) வெளியேற்றி முதல் அடியைக் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து லக்னோ அணியின் மிடில் ஆர்டரை சிதைக்கும் வகையில் ஆயுஷ் பதோனி (9) மற்றும் அதிரடி மன்னன் நிக்கோலஸ் பூரன் (19) ஆகியோரை அடுத்தடுத்து பெவிலியன் அனுப்பினார். இறுதியில் முகுல் சௌத்ரியையும் (18) ஆட்டமிழக்கச் செய்து, லக்னோ அணியால் ஒரு சவாலான இலக்கை எட்ட முடியாமல் தடுத்தார்.

முதல் வீரர்

ஐபிஎல் 2026ல் 10 விக்கெட்டுகளைத் தொட்ட முதல் வீரர்

இந்தத் தொடரில் பிரசித் கிருஷ்ணா ஒரு விக்கெட் மெஷின் போலச் செயல்பட்டு வருகிறார். இன்றைய போட்டியில் எடுத்த 4 விக்கெட்டுகளுடன் சேர்த்து, நடப்பு ஐபிஎல் தொடரில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். 4 போட்டிகளில் 10 விக்கெட்டுகளை (எகனாமி: 9.50) வீழ்த்தியுள்ள அவர், பர்ப்பிள் கேப்பிற்கான பந்தயத்தில் மற்ற வீரர்களை விடப் பல மைல்கள் முன்னிலையில் உள்ளார். கடந்த 2025 ஐபிஎல் தொடரிலும் இவரே அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

புள்ளிவிவரங்கள்

லக்னோ அணிக்கு எதிரான பிரசித்தின் மிரட்டல் புள்ளிவிவரங்கள்

பிரசித் கிருஷ்ணா லக்னோ அணிக்கு எதிராக விளையாடும் போதெல்லாம் ஒரு தனி உத்வேகத்துடன் செயல்படுகிறார். இதுவரை லக்னோவுக்கு எதிராக விளையாடிய 5 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை அவர் சாய்த்துள்ளார். ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் 101 போட்டிகளில் விளையாடி 116 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவருக்கு, ஐபிஎல் தொடரில் இது மூன்றாவது முறையாக ஒரு போட்டியில் 4 விக்கெட்டுகளை எடுக்கும் சாதனையாகும். இவரது துல்லியமான லென்த் மற்றும் வேகம் பேட்ஸ்மேன்களைக் திணறடித்து வருகிறது.

Advertisement

குஜராத் டைட்டன்ஸ்

குஜராத் அணியின் ஒட்டுமொத்த பந்துவீச்சு ஒரு பார்வை

பிரசித் கிருஷ்ணாவுக்குப் பக்கபலமாக இளம் வேகப்பந்து வீச்சாளர் அசோக் சர்மா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி (32 ரன்கள்) அசத்தினார். அனுபவ வீரர் முகமது சிராஜ் 4 ஓவர்களில் வெறும் 19 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி லக்னோவை மேலும் கட்டுப்படுத்தினார். ககிசோ ரபாடா ரன்களை வாரி வழங்கினாலும் ஒரு விக்கெட்டை எடுத்தார். நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் விக்கெட் எடுக்கவில்லை என்றாலும், 25 ரன்கள் மட்டுமே கொடுத்து ரன் வேகத்தைத் திறம்படக் குறைத்தார். ஒட்டுமொத்தமாக குஜராத் பந்துவீச்சாளர்களின் கூட்டு முயற்சியால் அந்த அணி வெற்றியை ருசித்தது.

Advertisement