Loading...
'உலகக்கோப்பை ஒன்றும் ஒத்திகை அல்ல': இந்திய ஹாக்கி அணியின் வீழ்ச்சியால் கொதித்தெழுந்த முன்னாள் வீரர் பி.ஆர். ஶ்ரீஜேஷ்
இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரண்டு அணிகளுமே அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியுள்ளன

'உலகக்கோப்பை ஒன்றும் ஒத்திகை அல்ல': இந்திய ஹாக்கி அணியின் வீழ்ச்சியால் கொதித்தெழுந்த முன்னாள் வீரர் பி.ஆர். ஶ்ரீஜேஷ்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 25, 2026
09:32 am

செய்தி முன்னோட்டம்

நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் நடைபெற்று வரும் 2026 ஹாக்கி உலகக்கோப்பை தொடரில், இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரண்டு அணிகளுமே அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் இரண்டாம் சுற்றோடு வெளியேறியுள்ளன. தொடர் தோல்விகளால் ஐந்து தசாப்த கால உலகக்கோப்பை அரையிறுதி கனவு தகர்ந்துள்ள நிலையில், இந்திய ஹாக்கி நிர்வாகத்தின் மீதும் அதன் பொறுப்புக்கூறல் மீதும் முன்னாள் நட்சத்திர கோல்கீப்பர் பி.ஆர். ஶ்ரீஜேஷ் தனது கடுமையான கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

கேள்விகள்

"யாராவது உண்மையாக அக்கறை கொள்கிறீர்களா?"

இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஶ்ரீஜேஷ், தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், இந்திய ஹாக்கி அமைப்பின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.

உலகக்கோப்பை போன்ற பிரம்மாண்ட தொடருக்கு முன்பாக பெண்கள் அணியின் தலைமைப் பயிற்சியாளர் விடுப்பில் சென்றதை சுட்டிக்காட்டிய அவர், "இறுதிக்கட்ட தயாரிப்புகளின் போது தலைமைப் பயிற்சியாளர் இல்லாத நிலையில், ஒரு அணி எவ்வாறு சிறப்பாகச் செயல்பட முடியும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

சாடல்

"கற்றுக்கொள்கிறோம் என்ற போர்வையில் ஒளிய வேண்டாம்"

ஆசிய அணிகளுக்கு எதிராக வெற்றி பெறுவதும், உலகத் தரவரிசையில் முன்னணி அணிகளிடம் தோற்றால் 'கற்றுக் கொள்கிறோம்' என்று கூறுவதும் வழக்கமாகிவிட்டது என ஶ்ரீஜேஷ் சாடியுள்ளார்.

"நாம் வெறும் நல்ல ஹாக்கியை விளையாடக் கூடிய அணியை உருவாக்குகிறோமா அல்லது உலகத் தரம் வாய்ந்த அணிகளை வீழ்த்தி வெற்றி பெறக்கூடிய அணியை உருவாக்குகிறோமா?" என்ற சங்கடமான கேள்வியை அவர் முன்வைத்துள்ளார்.

உலகக்கோப்பை என்பது ஒத்திகை தொடர் அல்ல; எனவே தோல்விகளுக்குப் பின்னால் காரணங்களைச் சொல்லாமல் நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

பின்னடைவு

உலகக்கோப்பையில் இந்திய அணிகளின் பின்னடைவு

ஆண்கள் பிரிவில் இந்திய அணி இங்கிலாந்திடம் 4-2 என்ற கணக்கிலும், நெதர்லாந்திடம் 2-0 என்ற கணக்கிலும், அர்ஜென்டினாவிடம் 5-3 என்ற கணக்கிலும் தோல்வியடைந்து 7/8 இடங்களுக்கான போட்டிக்குத் தள்ளப்பட்டது.

மற்றொருபுறம், பெண்கள் பிரிவு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்த போதிலும், அடித்த கோல்களின் அடிப்படையில் குறைந்த புள்ளிகள் பெற்று அரையிறுதி வாய்ப்பை இழந்து 5/6 இடங்களுக்கான ஆட்டத்திற்குச் சென்றுள்ளது.

ADVERTISEMENT