
2024 டி20 உலகக்கோப்பையை இங்கிலாந்துக்கு மாற்ற ஐசிசி திட்டம்!
செய்தி முன்னோட்டம்
டி20 உலகக்கோப்பை 2024 தொடரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், அங்கிருந்து வேறு நாட்டுக்கு இடம் மாற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக வெளியான அறிக்கையின்படி, ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024 ஐ வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவிலிருந்து இங்கிலாந்துக்கு மாற்றுவது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் கிரிக்கெட்டுக்கு தேவையான உள்கட்டமைப்பு இல்லாததால் இது குறித்து ஆலோசிக்கப்படுவதாக தெரிகிறது.
குறிப்பாக அமெரிக்காவை பொறுத்தவரை அங்குள்ள கிரிக்கெட் நிர்வாகிகளே, உள்கட்டமைப்பை மிக குறுகிய காலத்திற்குள் மேம்படுத்துவது சிரமமாக இருப்பதால் 2024 டி20 உலகக்கோப்பையை அங்கிருந்து மாற்றுவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
icc plans to swap host for 2024 and 2030 wc
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தரப்பில் முன்வைக்கப்படும் திட்டம்
அமெரிக்காவில் உள்கட்டமைப்பு மிக மோசமாக இருக்கும் சூழலில் 2024 மற்றும் 2030 டி20 உலகக்கோப்பை தொடர்களை நடத்தும் நாடுகளை மாற்றியமைக்க ஐசிசி திட்டமிட்டுள்ளது.
இதன்படி 2030இல் டி20 உலகக்கோப்பையை நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ள இங்கிலாந்தில் 2024 உலகக்கோப்பை தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த திட்டத்தின்படி 2030இல் இங்கிலாந்தில் நடக்க உள்ள தொடரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா கூட்டாக நடத்தும். இதன்படி நீண்ட காலம் கிடைக்கும் என்பதால் அமெரிக்காவில் உள்கட்டமைப்பை முழுமையாக மேம்படுத்தி விடலாம்.
இதுகுறித்து தற்போதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தவித தகவலும் இல்லை என்றாலும், வரவிருக்கும் நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என ஐசிசிக்கு நெருக்கமான வட்டாரங்களில் கூறப்படுகிறது.