சர்வதேச கிரிக்கெட்டில் சதம் விளாசிய ஐந்தாவது இங்கிலாந்து வீரர் ஆனார் பிலிப் சால்ட்
கிரெனடாவின் செயின்ட் ஜார்ஜ்ஸில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் பிலிப் சால்ட் சதம் விளாசினார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான பிலிப் சால்ட் 56 பந்துகளில் 9 சிக்சர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் உட்பட 109 ரன்கள் (நாட் அவுட்) எடுத்தார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் சதமடித்த ஐந்தாவது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்னர் அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் மாலன், லியாம் லிவிங்ஸ்டோன் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் மட்டுமே சதமடித்திருந்தனர். மேலும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இங்கிலாந்து வீரர் ஒருவரின் அதிகபட்ச டி20 ஸ்கோர் அடித்தவர் என்ற பெருமையையும் அவர் இதன் மூலம் பெற்றுள்ளார்.
இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ் போட்டி ஹைலைட்ஸ்
ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரின் மூன்றாவது போட்டியில் சனிக்கிழமை (டிசம்பர் 16) நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து பேட்டிங்கில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் எடுத்தது. நிக்கோலஸ் பூரன் அதிகபட்சமாக 82 ரன்கள் எடுத்தார். இதையடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி பிலிப் சால்டின் சதம் மற்றும் ஜோஸ் பட்லரின் (51) அரைசதம் மூலம் 19.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது. இதன் மூலம் 7 விக்கெட் வித்தாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.