சாம்பியன்ஸ் டிராபியில் ஹைபிரிட் முறைக்கு ஓகே சொல்லவில்லை; பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறுப்பு
2025 சாம்பியன்ஸ் டிராபிக்காக பிசிசிஐ வழங்கிய ஹைப்ரிட் மாடலுக்கு ஒப்புக்கொண்டதாகக் கூறப்படும் அனைத்து ஊடக அறிக்கைகளையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) நிராகரித்துள்ளது. அறிக்கைகளின்படி, இந்திய கிரிக்கெட் அணி தனது போட்டிகளை ஒரு நடுநிலையான இடத்தில் விளையாடும் என்று பிசிசிஐ முன்மொழிந்த நிலையில், பிசிபி அதை ஏற்றுக் கொண்டதாக கூறப்பட்டது. இருப்பினும், இரண்டு கிரிக்கெட் வாரியங்களும் ஹைப்ரிட் மாடல் பற்றி எதுவும் பேசவில்லை என்றும், போட்டிக்கு அத்தகைய திட்டங்கள் எதுவும் செய்யப்படவில்லை என்றும் பிசிபி வட்டாரங்களில் இருந்து தகவல் வந்துள்ளது. கராச்சி, லாகூர் மற்றும் ராவல்பிண்டி ஆகிய இடங்களில் போட்டியை நடத்த பாகிஸ்தான் விரும்புகிறது.
அரசியல் காரணங்களால் தடை
அரசியல் பதற்றம் காரணமாக இரு நாட்டு கிரிக்கெட் அணிகளும் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இருதரப்பு தொடரில் நேருக்கு நேர் சந்திக்கவில்லை. 2023 ஒருநாள் உலகக் கோப்பைக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவுக்குச் சென்றிருந்தாலும், அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபிக்காக பாகிஸ்தானுக்குச் செல்வார்களா என்பது குறித்து இந்தியா இறுதிப் பதிலை அளிக்கவில்லை. முன்னதாக, அந்நாட்டு மத்திய உள்துறை அமைச்சரும், பிசிபி தலைவருமான மொஹ்சின் நக்வி, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு பாகிஸ்தானுக்குச் செல்ல விரும்பும் இந்திய ரசிகர்களுக்கு விரைவாக விசா வழங்கும் கொள்கைக்கு உறுதியளித்தார். அமெரிக்காவில் இருந்து வந்த சீக்கிய யாத்ரீகர்கள் குழுவுடனான சந்திப்பின் போது அவர் இந்த உறுதிமொழியை அளித்தார்.