பாகிஸ்தான் டி20 கிரிக்கெட் அணியின் உயர் செயல்திறன் பயிற்சியாளராக யாசிர் அராபத் நியமனம்
பாகிஸ்தான் vs நியூசிலாந்துக்கு இடையேயான டி20 கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் உயர் செயல்திறன் பயிற்சியாளராக முன்னாள் ஆல்ரவுண்டர் யாசிர் அராபத்தை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிராக ஜனவரி 12 முதல் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் விளையாட உள்ளது. இன்னும் ஆறு மாதத்தில் டி20 உலகக்கோப்பை நடைபெற உள்ள நிலையில், அணியின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக தற்போது யாசிர் அணியின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுளளார். பாகிஸ்தான் அணி நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கு கிளம்பும் முன், யாசிர் அபாரபத் லாகூர் சென்று அணியுடன் இணைய உள்ளார்.
பந்துவீச்சு பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தவருக்கு ஜாக்பாட்
ஒருநாள் உலகக்கோப்பை தோல்விக்கு பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பதவிக்கு யாசிர் அராபத் விண்ணப்பித்தார். அவர் ஏற்கனவே நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்தில் பயிற்சியாளராக இருந்த தகுதியைக் கொண்டுள்ளார். இதனால் அவரது திறமையை முழுமையாக பயன்படுத்த விரும்பிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அணியின் டி20 உயர் செயல்திறன் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 2009 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ஐசிசி டி20 உலகக்கோப்பை வென்ற அணியில் யாசிர் அராபத்தும் இடம் பெற்றிருந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் வெறும் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்தாலும், அணிக்காக ஒயிட்பால் கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.