10 ஆண்டுகளுக்கு பிறகு தர்மசாலாவில் ஐபிஎல் போட்டி! மைதானம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்!
தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க (எச்பிசிஏ) ஸ்டேடியத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் தொடரில் முதல் போட்டி நடைபெற உள்ளது. உலகின் மிக அழகான கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றான எச்பிசிஏ ஸ்டேடியம், புதன்கிழமை (மே 17) பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் இடையேயான போட்டியை நடத்துகிறது. முன்னதாக, இங்கு கடைசியாக விளையாடிய ஐபிஎல் போட்டி 2013 இல் நடந்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் (தற்போது பஞ்சாப் கிங்ஸ்) மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையே போட்டி நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் அசார் முகமது ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல்லில் பாகிஸ்தான் வீரர் அசார் முகமது விளையாடியது எப்படி?
குறிப்பிடத்தக்க வகையில், 2008 ஆம் ஆண்டு முதல் சீசனில் மட்டுமே ஐபிஎல்லில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாடினர். ஆனால் அசார் முகமது பிரிட்டிஷ் குடியுரிமையைப் பெற்று ஐபிஎல் ஏலத்தில் ஆங்கிலேய வீரராக நுழைந்தார். அவர் 2012, 2013 இல் பஞ்சாப் அணிக்காகவும் 2015 இல் கொல்கத்தா அணிக்காகவும் விளையாடியுள்ளார். இதற்கிடையே, புகழ்பெற்ற ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறும் முன் கடைசியாக விளையாடிய போட்டியும் இது தான் என்பது கூடுதல் சுவாரஸ்ய தகவல். இந்த போட்டி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இறுதி லீக் போட்டியாகும். இதில் அந்த அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வென்றாலும், பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை.