டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் முதல்முறை; 200 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் சாதனை
செய்தி முன்னோட்டம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) வரலாற்றில் 200 விக்கெட்டுகளை எட்டிய முதல் பந்து வீச்சாளர் என்ற பெருமையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பெற்றுள்ளார்.
பார்டர் கவாஸ்கர் டிராபியின் ஐந்தாவது டெஸ்டில் இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸின் போது அவர் இந்த மைல்கல்லை எட்டினார்.
பாட் கம்மின்ஸ் ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரை வெளியேற்றி, நாதன் லயன் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரை விஞ்சி இந்த சாதனையை படைத்துள்ளார்.
இதில் அஸ்வின் ஏற்கனவே ஓய்வை அறிவித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மூவர் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 190 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப்
தற்போதைய டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சி
பாட் கம்மின்ஸின் 200 விக்கெட்டுகள் 88 இன்னிங்ஸ்களில் வந்துள்ளன. தற்போதைய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் மட்டும் 73 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
இது இந்தியாவின் ஜஸ்ப்ரீத் பும்ராவை விட நான்கு விக்கெட்டுகள் குறைவாகும். எனினும், அவரது தற்போதைய சுழற்சி எண்ணிக்கை 2019-21 சுழற்சியில் அவரது முந்தைய சிறந்த 70 விக்கெட்டுகளை முறியடித்துள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் எடுத்தவர்கள் தரவரிசையிலும், 67 போட்டிகளில் 294 விக்கெட்டுகளுடன் தென்னாப்பிரிக்காவின் ஜாக் காலிஸை முந்தினார்.
ஜடேஜாவின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் அவர் இதைச் செய்தார். முன்னதாக, ரிஷப் பண்ட் விக்கெட்டை வீழ்த்தியபோது காலிசை சமன் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.